என்னைப் புரிந்து கொள்வார் உண்டோ?

என்னைப் புரிந்து கொள்வார்       உண்டோ?


நான் வேதனைப்பட்ட நாட்களைவிட வேதனையை நினைத்து அழுத நாட்கள் அதிகம் என்று ஒரு வாலிபன் என்னிடம் வேதனையோடு கூறினான். மற்றவர்கள் முன்னிலையில் சிரித்துக்கொண்டு, மற்றர்களை சிரிக்கவைக்கிற பலர் உள்ளே அழுது கொண்டிருக்கின்றனர். வேதனையின் விளிம்பில் தம் வேதனையை பகிர்ந்துகொள்ள முடியாமல் தமக்குள்ளே அடக்கிக்கொண்டு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கின்றனர். நம்பி யாரிடம் பகிர்ந்து கொண்டார்களோ அவர்கள் அதனைப்புரிந்து கொள்ளவில்லை, பலர் அதனை தங்களுக்குள் வைத்திருக்கவும் தவறினர்இன்னும் சிலர் அதனை தம் சுயநலத்திற்குப் பயன்படுத்தியதால் வந்த வேதனையோ மிக அதிகம். நான் மிகவும் தனிமையாயிருக்கிறேன், என் வேதனை யாருக்குப் புரியும்? என்று புலம்பிக்கொண்டு வாழ்க்கையின் விளிம்புக்கே வந்துவிட்டவர்கள் அனேகர் இருக்கின்றனர். உங்களுக்கு ஆறுதல் தருகிற செய்தி ஒன்றுண்டு. உங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரேயொருவர் இருக்கிறார்! அதாவது அவர் உங்களைப்போலவே பல வேதனையான அனுபவங்களைக் கடந்து வந்தவர் வறுமையின் கொடுமையை அறிந்தவர்தனிமையின் வாட்டமறிந்தவர் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு பொய்க்குற்றஞ் சாட்டப்பட்டு சொல்லொணா துன்பங்களை அனுபவித்தவர்! அப்படியானால்  அவர் அனுபவித்த வேதனைகள் சிலவற்றை எமது வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்போமா?

பசி, வறுமையின் கொடுமையை அறிந்தவர்.

பிறப்பில் இவர் ஒரு ஏழை. இவரது தந்தை ஓரு தச்சன். ஒரு சிறு குழந்தையை முதல் முதலாக பள்ளிவாசலுக்கு கொண்டு போகும் போது, வசதியுள்ளவர்கள் ஒருவயதான ஆட்டுக்குட்டியையும் அதற்கு வசதியில்லாத ஏழைகள் ஒரு புறாக்குஞ்சையோ அல்லது காட்டுப்புறாவையோ பலியாகக் கொடுக்கும்படி கொண்டு போவது இறைச் சட்டம். இவரின் பெற்றோர் ஆட்டுக்குட்டியை கொண்டு போவதற்கு வசதியில்லாததினால் பறவைகள் இரண்டையே பலிகொடுத்தனர். மேலும் அவருடைய வாலிப வயதில் 40 நாட்கள் வரை உண்ணாமல் நோன்பு பிடித்துள்ளார். அவர் பசியாயிருந்தார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும்போது காண்கிறோம். இது பசியின் கொடுமை என்னவென்று அவா் அறிந்துள்ளதைக் காட்டுகிறது. ஆகவே எமது பசியின் கொடுமைவிரும்பியவற்றை வாங்க முடியாததால் ஏற்படும் ஏமாற்றம், கவலை இவை அனைத்தையும் அவர் விளங்கிக்கொள்ளக்கூடியவர்.

அகதியாயிருப்பதன் அவலத்தை அனுபவித்தவர்.

இலங்கை யுத்தம் இலட்சக்கணக்காணவர்களை அகதிகளாக்கியது. வீடுகளை இழந்து சொந்தங்களைப் பிரிந்து உறவுகளையும் உடமைகளையும் உரிமையையும் இழந்து அகதி முகாம்களிலும் அறிந்தவர் வீடுகளிலும் அந்நிய தேசங்களிலும் அகதிகளாக இவர்கள் சந்தித்த அவலங்கள் ஏராளம். சிறிய பையொன்றை மாத்திரமே கையிலெடுத்து (சிலருக்கு அதையும் எடுக்க கால அவகாசமிருக்கவில்லை) மரணபயத்தோடு உயிர் தப்ப ஓடியவர்கள் எத்தனைபேர்!. பால்மறவா சிறுகுழந்தைகளையும் பறிகொடுத்து விடுவோமோ என்ற பயத்தில் அவர்களைத் தூக்கிக்கொண்டு ஓடியவர்கள்  எத்தனைபேர்!. இவரும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு முகம்கொடுத்தவர்தான். இவர் வாழ்ந்த நாட்டிலுள்ள  இரண்டு வயதுக்குட்பட்ட எல்லாக் குழந்தைகளையும் கொல்லும்படி அந்நாட்டு கொடிய அரசன் கட்டளையிட்டபோது, பல குழந்தைகள் இரக்கமற்றவிதமாகக் கொல்லப் பட்டனர். மரண ஓலத்தின் மத்தியில்  அப்பொழுது குழந்தையாக இருந்த இவருடைய உயிரைக்காப்பாற்ற இவரது பெற்றோர் நாட்டை விட்டே ஓடி எகிப்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். அகதியாயிருப்பதன் அவலத்தையும் இவர் அனுபவித்திருக்கிறார்.


நண்பர்களால் கைவிடப்படுவதன் வேதனையை இவரால் புரிந்துகொள்ளமுடியும்.

உயிர்கொடுப்பான் தோழன் என்பார்கள். ஆனால் எம்மில் பலருடைய அனுபவம் உயிரெடுப்பான் தோழன் என்றே உள்ளது. நண்பர்களால் ஏமாற்றப் பட்டவர்களையும் இவரால் புரிந்துகொள்ளமுடியும் ஏனென்றால் இவரோடு ஒன்றாக இருந்து உண்டு குடித்த இவரது நண்பர்களில் ஒருவன் பணத்திற்கு ஆசைப்பட்டு இவரைக் காட்டிக்கொடுத்தான், இன்னுமொரு நண்பன் இவரைத்தெரியாதென மறுதலித்தான். இவருக்கு ஆபத்து வந்த வேளையில் இவரிடம் நன்மை பெற்ற அனேகர் இவரை கொலைசெய்யும்படி கூக்குரலிட்டனர் என்றால் பாருங்களேன்! நண்பர்களால் கைவிடப்படுவதன் வேதனையையும் நன்கு அறிவார்.

இழப்பின் துயரத்தை அறிந்திருந்தார்.

தன்னை வளர்த்து தனக்கு தச்சுத் தொழில் கற்று கொடுத்த தன் வளர்ப்புத்தந்தையை இழந்தார். தன் நெருங்கிய நண்பன் லாசருவின் மரணவேளையில் அவர் கண்ணீர் விட்டு அழுதார். லாசருவின் வீட்டில் எத்தனை தடவைகள் அவர்  தங்கியிருந்து ஒன்றாக உணவருந்தி, உறவாடி அவர்கள் சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இப்பொழுதோ தன்சிநேகிதன் மரித்துப்போய் அவன் குடும்பத்தார்களும் மற்றவர்களும் அழும் போது இவரும் கலங்கி கண்ணீர் விட்டழுதார். நெருக்கமானவர்களை இழப்பதன் துயரத்தை அவர் அறிந்திருந்தார். உறவுகளின் முறிவால் ஏற்படும் துயரத்தையும் அவர் அறிந்திருந்தார். அன்று நான் நேசித்த உறவு இன்று உயிரோடு இல்லை அல்லது உறவாடும் தூரத்தில் இல்லை என நீங்கள் வேதனையுறலாம். இழப்பின் துயரத்திற்கூடாகப் போன இவர் உங்கள் இழப்பின் துயரத்தையும் அறிவார்.

காயப்படுதலிதலின் வேதனையை தாங்கிக்கொண்டார்.

மனக்காயங்கள் எம் உள்ளங்களில் மாறாத வடுக்குகளை ஏற்படுத்தி விடுவதுண்டு. காயப்பட்ட நபர்களாக மாத்திரமல்ல காயப்பட்ட சமுதாயங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காயப்பட்ட பெற்றோரால் காயப்படுத்தப்படும் பிள்ளைகளும் காயப்பட்ட ஆசிரியர்களால் காயப்படுத்தப்பட்ட மாணவர்களும் ஏராளம். எங்கள் கதாநாயகனும் காயப்பட்டவர்தான். எனவே மனக்காயத்தின் வேதனையை இவர் அறிவார். ஆனால் இவர் காயப்பட்டவர் மட்டுமல்ல காயங்களை குணமாக்குகிறவராயு மிருக்கிறார். ஏசாயா நபி இவரைப்பற்றி கூறும்போது, “அசட்டைபண்ணப்பட்டவர், மக்களால் புறக்கணிக்கப்பட்டவர், துக்கம் நிறைந்தவர், பாடு அநுபவித்தவர் என்று கூறுகிறான்.

இன்னும் நீங்கள் என்னை புரிந்துகொள்வார் உண்டா என்று வேதனையில் இருக்கிறீர்களா? தொடரும் கட்டுரையையும் படியுங்கள்.

தொடரும்…

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?