குர்ஆனில் ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவம் (அ)

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 7

குர்ஆனிலும் இறைவேதத்திலும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம்

4. குர்ஆனில் ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவம்


ஈஸா அல் மஸீஹ்வின் வாழ்வுப் பற்றி குர்ஆனில் குறிப்படப்பட்டுள்ள நான்கு தனித்துவமான அம்சங்களை, அதாவது அவற்றின் முக்கியத்துவத்தில் நாம் ஏதேனும் வெளிச்சத்தைப் பெற முடியுமா என்பதைக் கருத்திற்கொள்வோம்.

). கன்னி-பிறப்பு

குர்ஆன் ஈஸா அல் மஸீஹ்வின் பிறப்பை, முழுவதுமாக இறைவனுடைய வல்லமையின் வெளிப்பாடாகவே கருதுவதுடன், முதல் மனிதனான ஆதமின் சிருஷ்டிப்பிலும் முக்கியமானதாக அறிவிக்கின்றது. நாம் அதைப் பின்வருமாறு வாசிக்கின்றோம்:
(அச்சமயம் மர்யம்) கூறினார்; ”என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்; ”அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ´ஆகுக´ எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”                                  சூறா 3:47

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின்குன்” (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.                 சூறா 3:59

இரண்டாவது வசனம் நேரடியாகக் கன்னிப்-பிறப்பைக் குறிக்கவில்லை எனினும் முதலாவது வசனத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பின், குர்ஆனும் இதனைத் தான் குறிப்பிடுகின்றது என்பது தெளிவாகின்றது. இரண்டு வசனங்களிலும் ஈஸா அல் மஸீஹ் சிருஷ்டிக்கப்பட்டார், அது முழுவதுமாக இறைவனுடைய வல்லமையின் வெளிப்பாடு என குர்ஆன் போதிக்கின்றது. இரண்டாம் வசனத்தில் அவருடைய சிருஷ்டிப்பு வித்தியாசமானதோ, ஆதமை விட அற்புதமானதோ இல்லை என நாம் வாசிக்கின்றோம்.

நாம் சுருக்கமாக இவ்விரு விடயங்களையும் கருத்திற்கொள்வோம். முதலாவதாக, கன்னி-பிறப்பானது, வெறுமனே இறைவனுடைய வல்லமையின் வெளிப்பாடா? அது எவ்வித அறிவிப்புமின்றி இறைவனுடைய வல்லமையினால் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது அதனுடைய அர்த்தத்தையும் நோக்கத்தையும் விபரிக்கவில்லை.

ஒன்றுமில்லாமையிலிருந்து முழு உலகத்தையும் சிருஷ்டிக்கும் செயற்பாடானது, நிச்சயமாக மகத்தானது. அத்துடன் சிருஷ்டிப்புடன் தொடர்புபட்ட ஏனைய விடயங்கள் (மனிதன், மிருகங்கள், ஏனைய உயிரிகளுக்கும் ஜீவன் அளித்தது) இறைவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமைக்கான போதிய ஆதாரங்களாக உள்ளன. குர்ஆனில், சிருஷ்டிப்பில் காணப்படும் ஆதாரங்களைக் கொண்டு மக்கள் இறைவனில் நம்பிக்கை கொள்ளாவிடில் அவர்கள் புதிய அற்புதங்கள், அடையாளங்கள் நடந்தாலும் நம்பிக்கை கொள்ளார்கள் என முகம்மது நபி கூறியுள்ளார்             (உதாரணமாக, சூறா 6:1-41 பார்க்க).

அதேபோல, இறுதி உயிர்த்தெழுதல் பற்றிய நிச்சயம் அவிசுவாசிகளுக்கு தேவையில்லை எனவும் குர்ஆன் போதிக்கின்றது. ஒன்றுமில்லாமையிலிருந்து இறைவன் மனிதனைப் படைக்க முடிந்தது எனும் உண்மையானது, அவர் அவர்களை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழச் செய்யவும் முடியும் (சூறா 22:5) என்பதற்கு உறுதியான ஆதாரமாய் உள்ளது. எனவே, இறைவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமைக்கு படைப்பு போதுமான ஆதாரமாய் உள்ளது என்பதை நாம் கருத்திற்கொள்வதோடு, இச் சான்றுகளின்படி மனிதர் அவரில் நம்பிக்கை கொள்ளாமற் போனால், எந்த இறுதி அடையாளமும் அவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்யாது. ஈஸா அல் மஸீஹின் கன்னி-பிறப்பு வெறுமனே இறைவனுடைய வல்லமையின் வெளிப்பாடாக மட்டும் இருக்க முடியாது. மேலும் அச் செயலை நிறைவேற்றுவதற்கு மிகச் சிறியளவு வல்லமையின் பயன்பாடே தேவைப்பட்டிருக்கும். அத்துடன் அதற்கான வெளிப்படையான விளக்கமும் இல்லை. கன்னி-பிறப்பானது சரீரப் பிரகாரமாக நிரூபிக்கப்பட முடியாது - அதற்கான வெளிப்படையான ஆதாரம் ஏதுமில்லை. இறைவனுடைய வார்த்தையில் கூறப்பட்டுள்ள விதமாக எவ்வித சந்தேகமுமின்றி, விசுவாசத்தினால் அதனை ஒரு சத்தியமாக நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் சரீரப்பிரகாரமாக அதனை நிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, வெளிப்பிரகாரமான விளக்கம் முழுவதுமாக போதாதுள்ளமையால், கன்னி-பிறப்பானது இறைவனுடைய வல்லமையின் எதேச்சையான வெளிப்பாடாக இருக்க முடியாது, என நாம் முடிவுசெய்கின்றோம். அதற்கு கட்டாயம் வேறொரு காரணம் இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, ஈஸா அல் மஸீஹ்வின் பிறப்பிற்கும் ஆதம் சிருஷ்டிக்கப்பட்டதற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என குர்ஆனில் கூறப்பட்ட கருதுகோளை நாம் நிச்சயம் கருத்திற்கொள்ள வேண்டும். இறைவனுடைய வல்லமையின் வெளிப்பாடாக, நாம் உடனடியாக அதற்கு உடன்படுவோம், ஏனெனில் கன்னி-பிறப்பு, ஆதமின் உருவாக்கத்தை விட அற்புதமானது அல்ல. மாறாக, ஆதமின் சிருஷ்டிப்புடன் ஒப்பிடும்போது, மிகச் சிறியளவு வல்லமையின் பயன்பாடே அவசியமாயிருந்திருக்கும். ஆனால் அதற்குப் பின்னால் வேறு ஏதோவொரு நோக்கம் இருந்திருக்கும் என்பதை குறிப்பாய் காண்பிக்கின்றது.

ஈஸா அல் மஸீஹ் கன்னியினிடத்தில் பிறப்பதற்கான அவசியம் என்ன? இவ்வாறான அசாதாரண விடயங்களை, அவை தேவையற்றதாக இருப்பின் இறைவன் ஏனோதானோவென்று செய்வதில்லை. இவ்விதமாக கன்னியினிடத்தில் பிறப்பது அவசியமாக காணப்பட்டதினாலேயே அவர் அவ்வாறு செய்திருப்பார். ஈஸா அல் மஸீஹ் இவ்விதம் பிறப்பதற்கு சில அடிப்படைகள் நிச்சயம் அவசியமாய்க் காணப்பட்டன.

ஆதமுடனான ஒப்பீடு எவ்விதத்திலும் எமக்கு உதவாது. ஆதம் மண்ணிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டான், அவனுக்கு தாயோ, தகப்பனோ இருக்கவில்லை - முதல் மனிதன் தாயோ, தகப்பனோ இன்றி சிருஷ்டிக்கப்படுவது அத்தியாவசியமாய்க் காணப்பட்டது. ஆனால் இறைவனுடைய சிருஷ்டிப்பின் செயற்பாடு நிறைவடைந்து நீண்ட காலமாகி, மனித இனத்தின் விருத்தி தொடர்ந்து காணப்பட்டபோது, ஈஸா அல் மஸீஹ் ஒரு பெண்ணிடத்தில் பிறந்தார். ஆதம் தாயோ, தகப்பனோ இன்றி சிருஷ்டிக்கப்படுவதற்கான அவசியத்தை நாம் காணக்கூடியதாயுள்ளது - ஆனால் ஈஸா அல் மஸீஹ் ஒரு தாயினிடத்தில் மாத்திரம் பிறப்பதற்கான அவசியம் என்னவாயிருந்தது? ஆதமுடனான ஒப்பீடு இக்கேள்விக்கான பதிலை எவ்விதத்திலும் தரவில்லை.

இக் கேள்வியை நாம் இவ்விதத்தில் நோக்கும்போது, அது உண்மையில் முழுமையான பதிலை வலியுறுத்துகிறது. வேறெவரும் கன்னியினிடத்தில் பிறவாதபோது, ஏன் ஈஸா அல் மஸீஹ் மாத்திரம் கன்னியினிடத்தில் பிறந்தார்? இறைவேதத்திலும் குர்ஆனிலும் மற்றைய பெண்களை விட ஏன் ஈஸா அல் மஸீஹ்வின் தாய் முக்கியத்துவம் பெறுகிறார்?  இவ்விரு வசனங்களையும் ஒப்பிடுக:

'ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது”    (லூக்கா 1:42).

மரியமே! உம்மை இறைவன் தேர்வு செய்து தூய்மையாக்கி உலக பெண்கள் அனைவருக்கும் மேலாக உம்மை சிறப்பித்துள்ளான் என்று வானவர் கூறினார். (அல் குர்ஆன் 3:42)

மரியாள், இவ்வுலகில் வாழ்ந்த பெண்மணிகளில் சிறந்தவர் என்பதை இவ் வசனங்கள் தெளிவாகப் போதிக்கின்றன. ஏன் அவ்விதம் போதிக்கின்றது? ஏனெனில் அவர் ஈஸா அல் மஸீஹ்வின் கன்னி-தாய் ஆவாள். பெண்களுள் மிகச் சிறந்தவள் அவளே, ஏனெனில் அவள் மனிதர்களுள் மிகச் சிறந்தவரின் தாயானாள். இவை அனைத்தும் அவளது குமாரனின் ஈடு இணையற்ற தனித்துவம் இருப்பதை வலியுறுத்துகின்றது - அத்துடன் இத் தனித்துவமானது ஏதோவொரு விதத்தில் ஈஸா அல் மஸீஹ் கன்னியிடத்தில் கர்ப்பந்தரித்து பிறப்பதை அவசியமாக்கியது.


அவளுக்கு ஒரு குற்றமற்ற குமாரனைகொடுக்கும் நோக்கத்துடனான இறைதூதனின் வருகையே குர்ஆன் தரும் ஒரேயொரு சான்றாகும். எவ்வாறாயினும் ஈஸாவின் இவ் விதிவிலக்கான பரிசுத்தம் அவரது கன்னி-பிறப்பை அத்தியாவசியமாக்கியது. ஆனால் இவ்விடயம் மட்டுமே அடுத்த விடயத்திற்கு எம்மை வழிநடத்தி, ஏனையவற்றுடன், ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவத்திற்கான முடிவு வரைக்கும் எம்மை இட்டுச் செல்கின்றது. ஆனால் அந்த தனித்துவம் என்ன என்பதை உண்மையில் அது வெளிப்படுத்துகிறதில்லை. ஆனால் நாம் தொடர்ந்தும், நாம் பெறக்கூடிய வெளிச்சம் என்னவென பார்ப்போம்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?