எமது பணி என்ன?

எமது பணி என்ன?

அன்புள்ள சகோதரன் ஜலால்டீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் கடிதம் கிடைத்தது. மிகவும் சந்தோஷம் அடைந்தேன். றபீல் உங்களைப் பற்றியும் சத்தியத்தில் வாழ உங்களுக்கிருக்கும் அவாவைப் பற்றியும் தெளிவாகக் கூறினார். எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.

உங்கள் பதில் கடிதத்தில் இப்படியொரு வாசகம் இருந்தது-  “சகோதரன் இறைநேசன், தாங்கள் அல் குர்ஆனையும் கற்றவர், ஹதீஸ்களையும் தெரிந்தவர். ஆகமங்களையும் கற்றவர். உங்களிடம் விரிவான விசாலமான அறிவுப் பொக்கிஷங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.”- இதனை முற்றாக நான் மறுக்கவில்லை. ஆனாலும் அநேகநேரம் நாங்கள் பிழைவிடுகிற ஒரு இடம், இது என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

அறிவோ அறிஞர்களோ நேர் வழியின்பால் வழி நடாத்துபவர்கள் என்று கருதினால் தத்துவ ஞானங்களைத்தான் நாங்கள் ஏற்கவேண்டிவரும்.
ஓஷோ போன்றவர்களின் புத்தகங்கள் மூளைக்கு நல்ல விருந்து. மனதிற்கு இனிமை. ஆனால் எங்களை அறியாமலேயே எங்களுக்குள் நானே இறைவன் எனும் கர்வத்தை கொண்டுவந்து விடும். “நான் யார்?” என்பது மிகவும் முக்கியமான கேள்விதான். இன்ஷா அல்லாஹ், அதனை அடுத்த கடிதத்தில் பார்ப்போம்.

என்னோடு கடிதத் தொடர்ப்பிலுள்ள எனது பல சகோதரர்களுக்கு என்னைச் சந்திக்க வேண்டும் எனும் ஆசை இருக்கின்றது. இப்படி கடிதம் வரும் பொழுதெல்லாம் நான் இறைவனிடம் மன்னிப்புக்கேட்டு வருகின்றேன். ஏனென்றால் எனது கடமையை சரியாக செய்யவில்லை எனும் குற்றச்சாட்டு எனக்குள் தோன்றுகின்றது.

‘ஒரு செல்வந்தன் தனது சொத்துக்களையும் தனது அநேக பிள்ளைகளையும் பராமரிக்கும் பொறுப்பை ஒருவனிடம் கொடுத்துவிட்டு, தனது வேலையாக பல வருடங்கள் வெளிநாட்டிற்குச் சென்று விடுகிறான். அவன் திரும்பி வந்து பார்க்கும் போது, அவனுடைய பிள்ளைகள் அவனை அறியவுமில்லை, அவனை ஏற்றுக்கொள்ளவுமில்லை. அந்த வேலைக்காரனையே தங்கள் தகப்பனாக ஏற்றுக்கொண்டனர்.’

அந்த செல்வந்தனின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்! அவன் எவ்வளவு வேதனை அடைந்திருப்பான்? இந்தக் கதையில் குற்றவாளி யார்?

பிள்ளைகளை குற்றவாளியாக கருத முடியாது. செல்வந்தனையும் குற்றவாளியாக கருத முடியாது. ஏனெனில் அவன் உரிமையாளன், தீர்மானம் எடுக்க அதிகாரமுடையவன். அப்படியானால் வேலைக்காரன்?!

நிச்சயமாக அவன் தான் குற்றவாளி. ஏனென்றால் அவன் தனது கடமையை சரிவர செய்ய வில்லை. பிள்ளைகளின் தகப்பனை அறிமுகப்படுத்துவதும் தான் யார் என்பதை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்ப்பதும் அவனது  கடமையே!

அன்பு சகோதரனே, நானும் இந்த வேலைக்காரனின் பணியைத் தான் செய்கிறேன். நீங்கள் எனக்கு அதிக முக்கியத்தும் கொடுப்பீர்களானால் நானும் குற்றவாளியாவேன். உங்களுக்கு உங்கள் தகப்பனை அறிமுகப் படுத்துவதே எனது கடமை. அதனைத் தான் நான் செய்கிறேன். நான் ஒரு வேலைக்காரன் என்பதை மிகவும் சந்தோஷத்துடன் கூறிக்கொள்கிறேன். நானும் றபீலும் இறைவனுடைய வேலைக்காரர்கள். எங்கள் இருவரில் யாரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை. எங்கள் இருவரையும் இன்னும் பலரையும் ஈஸா அல் மஸீஹ் தனது இரண்டாம் வருகையின் போது, அவருடைய பிள்ளைகள் அவரை அறிந்துகொள்ள ஆயத்தம் செய்வதற்காக, நியமித்துள்ளார். எமது பொறுப்பிலிருந்து நாங்கள் விலகினால் நரக நெருப்பில் தள்ளப்படுவோம். நாங்களும் சுவனபதியில் ஈஸா அல் மஸீஹ் அவர்களோடு வாழ ஆசைப்படுகிறோம்.

நான் இப்படிக் கூறுவதால் உங்களை சந்திக்க மறுத்துவிட்டதாக நினைக்க வேண்டாம். இறைவனின் வழிநடாத்துதலின் படி, நிச்சயமாக ஒரு நாள் சந்திப்போம். அது எப்பொழுது என்று தெளிவாக சொல்ல முடியவில்லை.

எங்களை ஏக இறைவன் நேர்வழியில் நடத்த எப்பொழுதும் துஆவில் இருப்போம்.
இப்படிக்கு

இறைநேசன்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?