கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (இ)

பகுதி 1
இறை ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)

இன்ஜீல் யோவான் 

யோவான் 1:5 

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.”

இறைவனோடிருப்பதெல்லாம் முற்றிலும் வெளிச்சமாகவும் பரிசுத்தமாகவும் காணப்படும். அவருடைய அர்ஷில் எல்லாமே தெளிவாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் பரிசுத்தமாகவுமே இருக்கும். ரூஹுல் குத்தூஸ் தூய்மையானவர். ரப்புல் ஆலமீனின் வெளிச்சம் கடுமையாகப் பிரகாசிக்காமல் மென்மையாகப் பிரகாசிக்கும். அது ஆறுதலளித்து குணப்படுத்தும்.

 ஈஸா அல் மஸீஹின் ஒளிக்கதிர் பரலோகத்திற்கு மட்டும் உட்பட்டதல்ல. அது இருளை ஊடுருவிச் சென்று மீட்பை உண்டாக்க வல்லது. ஈஸா அல் மஸீஹ் இன்று எல்லா இருளின் நடுவிலும் ஒளி வீசுகிறார் என்பது அவருடைய கிருபை. தொலைந்து போனவர்களை அவர் கைவிட்டு விடாமல், அவர்களை விடுவித்து அவர்களுக்கு ஒளியூட்டுகிறார். ஒளியின் உலகத்திற்கு எதிராக இருக்கும் இருளின் உலகம் என்று ஒன்றிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இருள் எவ்வாறு வந்தது என்ற முழுமையான விவரம் நமக்குத் தெரியாது. இன்ஜீல் யோவானில் இந்த இரகசியம் வெளிப்படுத்தவில்லை. ஒளியை நாம் அறிய வேண்டும் ஆனால் இருளை நாம் ஆழமாகப் பார்ப்பதை விரும்பவில்லை. அனைத்து மனிதர்களும் படைப்புகளும் இருளுக்குள் விழுந்துபோனது, முழு உலகமும் ஷைத்தானுடைய செல்வாக்குக்குட்பட்டுவிட்டது. ஈஸா அல் மஸீஹ் இறைவனோடு இசைந்ததாகவும் நன்மையானதாகவும் துன்யாவை படைத்திருந்தால், இருள் அதற்குள் எவ்வாறு நுழைய முடியும் என்று கேட்கலாம். இறைவன் தன்னுடைய மகிமையில் சாயலில் நம்மைப் படைத்திருந்தால் இன்று நாம் அந்த மகிமைக்கு ஏற்றவர்களாயிராததெப்படி என்றும் கேட்கலாம்.
ஷைத்தான் இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் அவருடைய ஒளியை அழிக்க முயற்சித்தான். ஷைத்தான் எப்பொழுதும் ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்கு எதிரானவன். எனவே அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஒளியை அவன் இழந்துபோனான். அவன் பெருமையுள்ளவனாகி இறைவனைவிட மேன்மையை அடைய நாடினான். அவரை மேற்கொள்ள அவருக்கு மேலாக தன்னை உயர்த்த விரும்பினான். அதன்பிறகுதான் அவன் இருளின் அதிபதியானான்.
அன்புச் சகோதரனே,சகோதரியே, உங்களுடைய வாழ்வின் நோக்கம் என்ன? நீங்கள் இறைவனை விட்டுவிட்டு, மேன்மையையும், புகழையும், சுய திருப்தியையும் நாடுகிறீர்களா? அப்படியானால் இருளில் இருக்கும் பொல்லாங்கானைப் போன்றவர்களோடு நீங்களும் சேர்ந்துகொள்ளுகிறீர்கள். தெருக்களில் உங்களைத் தாண்டிச் செல்லும் மக்களுடைய முகங்களைப் பாருங்கள். அவர்களுடைய கண்களில் இருளையா அல்லது ஒளியையா, எதைப் பார்க்கிறீர்கள்? அவர்களுடைய இருதயம் இறைவனின் மகிழ்ச்சியை பிரதிபலிக்கிறதா? ஷைத்தானுடைய சோகத்தைப் பிரதிபலிக்கிறதா?
இறைவனுடைய பரிசுத்த வெளிச்சம் ஷைத்தானை நியாயம் தீர்ப்பதால் அவன் இறைவனை வெறுக்கிறான். ஒளி அவனுடைய கொடூரத்தை வெளிக்கொண்டு வருவதை அவன் விரும்புவதில்லை. அதனால் அவன் ஒளிந்துகொள்கிறான், தன்னை மறைத்துக்கொள்கிறான். ஈஸா அல் மஸீஹ் அவர்களையும் அவரது ஒளியைப் பின்பற்றுபவர்களையும் மேற்கொள்ள முயற்சிக்கிறான். இந்தத் துரோகி இறைவனுடைய வெளிச்சத்தைத் தாங்க முடியாமல் அதை வெறுக்கிறான். வெளிச்சத்தைப் பார்க்கக்கூடாது என்பதற்காகவே அவன் தன்னுடைய முகத்தை மறைத்துக்கொள்கிறான். மஸீஹ்வின் சூரியன் இலட்சக் கணக்கான மக்களுடைய பாவ இருளில் ஒளிரும்போது அவர்கள் அதைப் பார்க்காமல் இருப்பதுதான் பயங்கரமானது. சூரியன் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். அதை நாம் விளக்கப்படுத்தத் தேவையில்லை. சூரியன் தானாகவே ஒளியூட்டுகிறது, தெளிவாயிருக்கிறது, கதிர்வீசுகிறது. அதுதான் வாழ்வின் ஆதாரம் என்று ஒவ்வொரு சிறு பிள்ளையும் அறியும்.
ஆனால் எண்ணற்ற மக்கள் ஈஸா அல் மஸீஹின் மகிமையையும் வல்லமையையும் காண்பதில்லை. ஏனெனில் அவர்கள் அதைப் புரிந்துகொள்ள விரும்புவதில்லை. வஞ்சனையான கருத்துக்கள் அவர்களுடைய கண்களை திரைபோட்டு மறைத்து விடுகிறது. ஆகவே அவர்கள் கிறிஸ்துவின் தெய்வீகத்தைக் குறித்த மெய்யான செய்தியை புறக்கணிக்கிறார்கள். உண்மையில் அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிய விரும்பவில்லை. அவர்கள் ஒளியினிடத்தில் வர விரும்பாமல், இருளிலேயே இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் தங்களை மறுதலிப்பதுமில்லை, தங்கள் பாவங்களை அறிக்கை செய்வதுமில்லை. ஈஸா அல் மஸீஹின் வெளிச்சத்தின் கிருபைக்கு அவர்கள் குருடர்களாகவே நிலைத்திருக்கிறார்கள். இருள் ஒளிக்கெதிராகப் போட்டியிடுகிறது, ஆனால் ஒளி அன்பினால் அதை மேற்கொள்ளுகிறது. ஆகவே நீங்கள் யார்? இறைவனிடத்திலிருந்து வரும் ஒளியா அல்லது ஷைத்தானிடத்திலிருந்து வரும் இருளா?
துஆ
 யா ரப்பீ, நீரே உலகத்திற்கு வெளிச்சம். விசுவாசத்திலும் உம்முடைய அன்பிலும் நாங்கள் உம்மைப் பின்பற்றுகிறோம். நாங்கள் இருளில் நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருக்கிறோம். இறைவனுடைய கோபத்தின் இருளுக்குப் பயந்து நீர் எங்களைத் தனியே விட்டுவிடாமல், உம்முடைய தெளிவான வெளிச்சத்திற்குள் எங்களை அழைத்தபடியால் உமக்கு நன்றி சொல்லுகிறோம். நீர் மக்களைச் சுற்றிப் பிரகாசித்தும் அதை அறியாமல் இருக்கும் இலட்சக் கணக்கான மக்களை நீர் ஒளியூட்டும். ஒளியூட்டுபவரே, எங்கள் மேல் இரக்கமாயிருந்து எங்களுக்கு ஒளியைத் தாரும்.

கேள்வி:
  1. ஆவிக்குரிய பொருளில் இருளுக்கும் ஒளிக்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்ன?
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. (ஏசாயா 9:2)


Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?