கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல்
இன்ஜீல் யோவான்
உங்கள் அனைவர் மீதும்
கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. மீண்டும் ஒரு தொடர் கட்டுரையில் உங்களை
சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த தொடர் கட்டுரையின் நோக்கம் எங்கள்
சிறுவயது முதல் இன்ஜீல் இன்ஜீல் என்று கேள்விபட்ட அந்த இன்ஜீலின் ஒரு கிதாபானா
யோவான் (யூகன்னா) என்ற ஈஸா அல் மஸீஹ் பற்றிய செய்திகளில் உள்ள ஒவ்வொரு
வார்த்தையையும் தனித்தனியாக ஆராய்ந்து படிப்பதாகும்.
இறைவா, எனக்கு சத்தியத்தை
வெளிப்படுத்துவாயாக என்ற துஆவோடு இந்த கட்டுரைகளை படியுங்கள். இறைவேதத்திலிருந்து
சுட்டிகாட்டப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் வேதத்தில் இருக்கிறதா? என்று
ஆராய்ந்து படிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
பகுதி 1
இறை ஒளியின் பிரகாசம் (யோவான்
1:1 - 4:54)
1. இறைவனுடைய வார்த்தை
(கலிமதுல்லாஹ்) மானிடனாக அவதரித்தல்
(யோவான்
1:1-5)
யோவான் 1:1
“ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது.”
மனிதன் வார்த்தைகள் மூலம் தன்னுடைய சிந்தனைகளையும் உள்நோக்கங்களையும் தெரிவிக்கிறான். உங்களுடைய வார்த்தைகளே உங்களுடைய ஆள்தத்துவத்தின் சாரமாகவும் உங்களுடைய ரூஹின்
வெளிப்பாடாகவும் காணப்படுகின்றன.
ஒரு உயர்ந்த பொருளில் இறைவனுடைய வார்த்தை அவருடைய தெய்வீக ஆள்தத்துவத்தையும் அவருடைய பரிசுத்த வார்த்தையிலுள்ள அனைத்து வல்லமைகளையும் தெரிவிக்கிறது. ஏனென்றால் ஆதியிலே இறைவன் தன்னுடைய வல்லமையுள்ள வார்த்தையின் மூலமாகவே உலகத்தைப் படைத்தார். அவர் உண்டாகக்கடவது என்று சொன்னார், அது அப்படியே ஆயிற்று. அவருடைய வார்த்தைகளுக்கு இன்றுவரை வல்லமையிருக்கிறது. உங்கள் கரங்களில் இருக்கும் இந்த நற்செய்தி முழுவதும் இறைவனுடைய அதிகாரத்தினால் நிறைந்தது என்று நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இது எந்த அணுகுண்டையும்விட வலுவானதாக செயல்பட்டு உங்களிலுள்ள தீமையை அழித்து உங்களில் நன்மையானதைக் கட்டியெழுப்புகிறது.
இன்ஜீல் யோவானில் இடம்பெறும் வார்த்தை
(கலிமா) என்ற பதத்தின் உள்ளான இரகசியம் என்னவென்றால், கிரேக்க மொழியில் அதற்கு இரண்டு பொருள் இருக்கிறது. முதலாவது நம்முடைய வாயிலிருந்து நமது சத்தத்தைச் சுமந்துவரும் மூச்சுக்காற்று. இரண்டாவது ஆண்பாலில் வரும் ஆவிக்குரிய நபர். வார்த்தைத் தொடர்ந்து வரும் வினையின் பாலைப் பொறுத்து (ஆண்பாலா பெண்பாலா என்பதைப் பொறுத்து) இந்த இரண்டு பொருளும் அரபு மொழியில் தோன்றும். ஆங்கில மொழியில் அந்த வார்த்தை ஆண்பாலா அல்லது பாலற்றதா என்பது அதற்குப் பயன்படுத்தப்படும் பிரதிப் பெயர்ச்சொல்லைப் பொறுத்து பிரித்தறியப்படும். இவ்வாறு, ஆதியிலே வார்த்தை இருந்தது என்று சொல்லிவிட்டு, அவர் ஆதியிலே இருந்தார் என்று இரண்டாம் வசனத்தில் விளக்கப்படுத்தும்போது, ஈஸா
மஸீஹின் ஆள்தத்துவத்தைக் குறித்த மறைபொருட்களில் ஒன்றை இது காண்பிக்கிறது. ஒரு மனிதனுடைய வாயிலிருந்து வார்த்தை வருவதுபோல, மஸீஹ் இறைவனிடத்திலிருந்து வருகிறார். மஸீஹ் இறைவனுடைய வார்த்தையாகவும் அவரிடத்திலிருந்து வரும் ஆவியாகவும் இருக்கிறார் என்ற பயன்பாட்டை நாம் மற்ற சமயங்களிலும் காணலாம். கன்னி மரியாளிடத்தில் பிறந்தவராகிய அவரைத் தவிர வேறு எந்த மனிதனும் இந்த பரலோக குணாதிசயங்களைப் பெற்றுக்கொள்வதில்லை.
ஈஸா அல் மஸீஹ் பெத்தலகேமில் மனுவுருவானது அவருடைய இருப்பின் ஆரம்பமல்ல, ஏனெனில் அவர் அநாதி காலமாக உலகங்கள் உருவாவதற்கு முன்பாகவே பிதாவிலிருந்து புறப்பட்டவர். இவ்வாறு பிதா நித்தியராயிருப்பதுபோல, மஸீஹும் நித்தியமானவராயிருக்கிறார். இறைவனுடைய வார்த்தை எந்த வகையிலும் மாறாததைப் போல அவரும் மாறாதவராயிருக்கிறார்.
ஈஸா அல் மஸீஹுக்கும் அவருடைய பிதாவுக்கும் உள்ள அடிப்படை உறவை இன்ஜீல்
யோவானில் நாங்கள் காண்கிறோம். ஒரு மனிதனுடைய வார்த்தை அவனுடைய உதடுகளை விட்டு வெளியேறியவுடனே காற்றிலே கரைந்து விடுவதைப் போல,
ஈஸா அல் மஸீஹ் பிதாவிலிருந்து பிரிந்து போய்விடுவதில்லை.
மஸீஹ் இறைவனோடிருந்து அவருக்குள் நிலைத்திருக்கிறார்.
இறைவனோடு என்ற கூற்றுக்கு எபிரெய மொழியில் இறைவனை நோக்கிச் செல்லுதல்,
இறைவனுக்குள் செல்லுதல் என்று பொருள்.
இவ்வாறு ஈஸா அல் மஸீஹ் எப்போதுமே இறைவனை நோக்கியே இயங்கினார்.
ரூஹுல் குத்தூசினால் பிறந்த எவருமே இவ்விதமாகவே இயங்குவார்கள்.
ஏனெனில் அவரே அன்பின் ஆதாரமாக இருக்கிறார்.
இந்த அன்பு தனித்தியங்க ஒருநாளும் விரும்பாது.
அது எப்போதும் அதன் ஆதாரத்தை நோக்கி இயங்கி அதற்குள்ளேயே செல்லும்.
இறைவன் தன்னுடைய வார்த்தையினால் அனைத்துப் படைப்புகளையும் ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கியதுபோல அவர் ஈஸா
அல் மஸீஹ்வை உருவாக்கவில்லை. குமாரன் தன்னில்தானே படைப்பாற்றலுள்ள வார்த்தையாகவும்
(கலிமாவாகவும்) பிதாவின் அதிகாரத்தைத் தன்னில் சுமந்தவராகவும் காணப்பட்டார். இந்த வசனத்தின் இறுதிப் பகுதியில் வார்த்தை இறைவனாகவே காணப்பட்டார் என்ற வித்தியாசமான, ஆனால் முடிவான சொற்றொடரைக் காண்கிறோம். இதனடிப்படையில்
இன்ஜீல் யோவான் முதல் வசனத்தில் ஈஸா அல் மஸீஹ் இறைவனிடமிருந்து வந்தவர் என்றும், ஒளியினிடத்திலிருந்து வந்த ஒளியென்றும், மெய்யான இறைவனிடத்திலிருந்து வந்த இறைவன் என்றும், பிறந்தவர் உருவாக்கப்பட்டவரல்ல என்றும், பிதாவுடன் தன்மையில் ஒன்றானவர் என்றும், நித்தியமான, வல்லமையுள்ள, பரிசுத்த, இரக்கமுள்ள ஏக இறைவன்
என்றும் கூறுகிறது. ஈஸா
அல் மஸீஹ்வை கலிமதுல்லாஹ் என்று அறிக்கையிடும் எவரும், அவருடைய இறைத்துவத்தை குறித்த இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்வார்கள்.
துஆ
ரப்புல் ஆலமீன் ஈஸா அல் மஸீஹே, நீர் காலங்களுக்கு முன்பே பிதாவோடு இருந்தபடியினாலும்,
எப்போதும் அவரை நோக்கி இயங்கிக்கொண்டிருக்கிறபடியினாலும் உமக்கு முன்பாக சுஜுத்
செய்து நாங்கள் தொழுகிறோம்.
நாங்கள் உம்மையல்லாமல் தனித்து இயங்காதிருக்க எங்களுக்கு உதவி செய்யுவாயாக.
நாங்கள் எப்போதும் எங்களை உமக்கு ஒப்புக்கொடுத்து,
உம்முடைய அன்பில் நிலைத்திருக்க உதவி செய்யுவாயாக.
யா ரப்பே ஈஸாவே, நாங்கள் புரிந்துகொள்ளும் வார்த்தைகளில் உம்முடைய நற்செய்தியின் மூலமாக நீர் எங்களிடத்தில் வருவதற்காகவும்,
உம்முடைய வார்த்தையில் நாங்கள் வைக்கும் ஈமானினால் உம்முடைய அதிகாரம் எங்களில் காணப்படுவதற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி சொல்லுகிறோம்.
ஆமீன்..
கேள்வி:
- யோவான்
முதலாம் அதிகாரம்
முதலாம் வசனத்தில்
திரும்பத்திரும்ப வரும்
வார்த்தை என்ன?
அதன் பொருள்
என்ன?
Comments
Post a Comment