நீங்கள் மீண்டும் பிறந்துவிட்டீர்களா?

நீங்கள் மீண்டும் பிறந்துவிட்டீர்களா? 
இன்ஜீல் யோவான் பாடம் தொடர்ச்சி...
யோவான் 1:11-13 


11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் இறைவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். 13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், இறைவனாலே பிறந்தவர்கள்.

பழைய ஏற்பாட்டு மக்கள் இறைவனுக்குரியவர்களாகக் காணப்பட்டார்கள். ஏனெனில் பாவிகளாகிய அவர்களைப் பரிசுத்தப்படுத்தி உடன்படிக்கையின் மூலமாக அவர் அவர்களைத் தன்னுடன் இணைத்திருந்தார். பல நூறு வருடங்களாக அவர் அவர்களை வழிநடத்தினார். அவர்களுடைய இருதயங்களை நியாயப்பிரமாணம் என்னும் கலப்பையினால் உழுது நற்செய்தி என்னும் விதைக்காக அவர்களை ஆயத்தப்படுத்தியிருந்தார். இந்த வகையில் நபி இப்ராஹிமின் சந்ததியின் வரலாறு மஸீஹ்வின் வருகையை நோக்கி இயங்கிக்கொண்டிருந்தது. அவருடைய தோற்றமே பழைய ஏற்பாட்டின் நோக்கமாகவும் பொருளாகவும் காணப்பட்டது.

ரப்புல் ஆலமீனை வரவேற்கும்படி தெரிந்துகொள்ளப்பட்ட மக்களே அவரைப் புறக்கணித்துவிட்டார்கள் என்பதும் அவர்கள் அந்த ஒளியைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதும் விசித்திரமான உண்மைகள். அவர்கள் ஷரீஆவிற்கு கீழாக கேள்விகணக்கை நோக்கி ஓடும் இருளின் வாழ்க்கை விரும்பித் தெரிந்துகொண்டார்கள். ஆகவே அவர்கள் ரஹ்மத்தை முற்றிலும் இழந்து மஸீஹ்விலுள்ள இரட்சிப்பைக் காட்டிலும் தங்களுடைய சொந்த நற்செயல்களை அதிகம் நேசித்தார்கள். அவர்கள் மனந்திரும்பாமல், சத்தியத்தின் ஆவிக்கு எதிராக தங்களைக் கடினப்படுத்தினார்கள்.

பழைய ஏற்பாட்டு மக்கள் மட்டுல்ல, முழு துன்யாவும் இறைவனுடையதுதான். ஏனெனில் அவரே கற்களையும், தாவரங்களையும், மிருகங்களையும், மனித சமுதாயத்தையும் படைத்தவர். இந்தக் காரணத்தினால் பழைய ஏற்பாட்டு மக்களுக்கிருக்கும் அதே பொறுப்பை எல்லா மக்களும் பெற்றிருக்கிறார்கள். நம்முடைய இரட்சகரும் நமக்குச் சொந்தக்காரருமானவர் நம்முடைய இருதயத்தில் நுழைய விரும்புகிறார், யார் அவரை வரவேற்பார்? நீங்கள் இறைவனுக்குச் சொந்தமானவர்கள். நீங்கள் உங்களை ரப்புல் ஆலமீனின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுத்திருக்கிறீர்களா? இன்று அநேக சமுதாயங்கள் ஈஸா அல் மஸீஹின் வெளிச்சத்திற்குத் தங்களைத் திறந்துகொடுக்க விருப்பமில்லாமல் இருப்பது அவலத்திற்குரியது. அவர்களுடைய இருதயத்தின் கடினத்தை மேற்கொள்ளும் ஈஸா அல் மஸீஹின் ஒளிக்கதிர்கள் அவர்களுக்குத் தேவையில்லை. இப்படியாக இன்று மறுபடியும் அவர்கள் இறைமகனைப் புறக்கணிக்கிறார்கள்.

இப்ராஹிமின் சந்ததியோ அல்லது மனித சமுதாயத்தில் வரும் யாராக இருந்தாலும் ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்கு தங்கள் இருதயத்தைத் திறந்து, அந்த வல்லமையுள்ள இரட்சகரின் கரத்தில் தங்களை ஒப்புக்கொடுத்தால், அந்த நபர் மாபெரும் அற்புதத்தை அனுபவிப்பார். சொர்க்கத்தின் ஒளி அந்த நபரை இறை ஒளியினால் நிரப்பும், அந்த ஒளி இருதயத்தில் இருக்கும் இருளை மேற்கொள்ளும். மேலும் இறைவனுடைய வல்லமை அந்த நபருக்குள் வந்து, உள்ளான மனிதனைப் புதுப்பிக்கும். ஈஸா அல் மஸீஹ் உங்களைப் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, இறைவனுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலைக்குள் உங்களைக் கொண்டுவருவார். நீங்கள் ஈஸா அல் மஸீஹை நேசித்தால், பரிசுத்த ஆவியானவர் (ரூஹுல் குத்தூஸ்) உங்களுக்குள் வந்து, உங்களுடைய வாழ்வில் அவருடைய விடுதலையின் செயலைத் தொடங்குவார்.

இன்ஜீல் யோவானில் நாங்கள் இறைவனுடைய பிள்ளைகள் ஆவோம் என்றோ, இறைவனுடைய பிள்ளைகள் ஆகியிருக்கிறோம் என்றோ சொல்லவில்லை. நாம் இறைவனுடைய பிள்ளைகள் ஆகிறோம் என்று நிகழ்காலத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது நாம் அவிக்குரிய வாழ்வில் வளருகிறோம் என்று சொல்லுகிறார். இந்த வார்த்தைகளில் நாம் இரண்டு காரியங்களைக் காண்கிறோம். ஒன்று நாம் புதிய வாழ்க்கைக்குள் நுழைகிறோம். இன்னொன்று நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் பூரணத்துவத்தை நோக்கிய வளர்ச்சியின் செயல்பாடு ஒன்று அங்கு ஆரம்பமாகிறது. ஏக இறைவனின் வல்லமை நம்மைப் புதிய சிருஷ்டிகளாகப் படைத்திருக்கிறது. இதே வல்லமை நம்மைப் பரிசுத்தப்படுத்தி பூரணப்படுத்தும். இறைவன் நம்மைத் தத்தெடுப்பதினால் மட்டும் நாம் அவருடைய பிள்ளைகளாகாமல் ஆவிக்குரிய பிறப்பினாலும் நாம் அவருடைய பிள்ளைகளாகிறோம். ஈஸா அல் மஸீஹின் ஆவியானவர் (ரூஹ்) நமக்குள் இறங்குகிறார் என்றால் அதற்கு நாம் இறைவனுடைய அதிகாரத்தினால் நிரப்படுகிறோம் என்று பொருள். முஃமீன்களுக்குள்  இந்த இறை அதிகாரம் ஊற்றப்படுவது, இந்த உலகத்திலோ அல்லது உலகத்தின் முடிவிலோ எந்த சக்தியினாலும் அவர்கள் முழுமையான இறை குணாதிசயங்களைப் பெற்றுக்கொள்வதைத் தடைசெய்ய முடியாது என்பதைக் காட்டுகிறது. ஈமானை தொடக்குகிறவரும் முடிப்பவரும் ஈஸா அல் மஸீஹே. இவ்வுலகின் பிள்ளைகளையும் இறைவனுடைய பிள்ளைகளையும் நாம் ஒப்பிட முடியாது. நம்முடைய பெற்றோர் தங்களுடைய விருப்பத்தின்படியும் திட்டத்தின்படியும் நம்மைப் பெற்றெடுத்தனர். ஒருவேளை அவர்கள் துஆ செய்து, தூய ஆவியானவரின் (ரூஹுல் குத்தூஸின்) வழிகாட்டலுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்திருக்கலாம். ஆனால் நம்முடைய பெற்றோரிடத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் ஆன்மீக, உளவியல் மற்றும் உடலியல் காரியங்கள் எதற்கும் இறைவனிடத்திலிருந்து வரும் புதிய பிறப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனெனில் ஆவிக்குரிய புதுப்பித்தல் என்பது தொடக்கத்திலிருந்தே பரிசுத்தமானதாகவும், எந்தவொரு முஃமினையும் நேரடியாகப் பிறப்பிக்கிற இறைவனிடத்திலிருந்து வருவதாகவும் இருக்கிறது. ஏனெனில் அவரே நம்முடைய ஆவிக்குரிய தகப்பன்.

எந்தக் குழந்தையும் தன்னைத் தானே பிறப்பித்துக்கொள்ள முடியாது. அதேபோல நம்முடைய ஆவிக்குரிய பிறப்பும் முற்றிலும் இறைவனுடைய ரஹ்மத்தேயாகும். ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய நற்செய்தியின் விதைகளை நம்முடைய இருதயங்களில் விதைக்கிறார். யாரெல்லாம் இந்த விதைகளை நேசிக்கிறார்களோ, அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு, அதை வைத்துக்கொள்கிறார்கள். அவர்களில் இறைவனுடைய நித்திய வாழ்வு வளர்ச்சியடையும். யாரெல்லாம் இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கைக்கொள்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள்.

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறப்பதோ, கிறிஸ்தவர்களோடு இணைந்திருப்பதோ ஒருவனைக் முஃமீன் ஆக்காது, ஈஸா அல் மஸீஹின் நாமத்தில் ஈமான் கொள்வதே ஒருவனை முஃமீனாக்கும். இந்த ஈமானின் பொருள் அவருக்கு நெருக்கமாக வருவது, அவருடைய குணாதிசயங்களுக்குள் மூழ்கிவிடுவது, அவருடைய சாந்தகுணத்தைக் கற்றுக்கொள்வது மற்றும் அவருடைய வல்லமையில் தங்கியிருப்பதில் வளருவது. அவர் நம்மை விடுவித்து அவருடைய சாயலாக நம்மை மறுரூபப்படுத்துகிறார் என்பதை நம்பி, நம்மை அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கும்போது இந்த வளர்ச்சி நடைபெறுகிறது. ஈமான் என்பது அவருக்கும் நமக்கும் இடையிலான உள்ளபூர்வமான உறவாகவும் ஒரு நித்திய உடன்படிக்கையாகவும் உள்ளது. இந்த ஆவிக்குரிய வளர்ச்சி விசுவாசத்தின் மூலமாகவே அன்றி நமக்குள் நடைபெறாது. மறுபடியும் பிறப்பது ஈமானைவிட பெரியதோ கடினமானதோ அல்ல. அதேபோல ஈமான் மறுபிறப்பைவிட இலகுவானதோ குறைவானதோ அல்ல. அவையிரண்டும் ஒன்றுதான்.

மஸீஹ் வருவதற்கு முன்பாக இன்ஜீல் யோவானில் அவரின் பெயரைச் சொல்லவில்லை. இதற்குப் பதிலாக அவருடைய ஆளத்துவத்தை பல இனங்களைச் சேர்ந்த முஃமீன்களுக்கு அவர்கள் புரியக்கூடிய மொழிநடையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த கிதாபில் தன்னுடைய ஜமாஅத்துக்கு முன்வைக்கும் மஸீஹ்வின் ஆறு தன்மைகளின் பொருள் உங்களுக்குப் புரிகிறதா? இந்த குணாதிசயங்களின் வல்லமைக்கு உங்கள் இருதயத்தை திறந்து அவற்றின் முன் நீங்கள் பணிந்துகொள்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் மெய்யாகவே இறைவனுடைய பிள்ளையாவீர்கள்!

துஆ
ஏக இறைவனான ஈஸா அல் மஸீஹே, நான் உம்மைப் பணிந்துகொண்டு, உம்மில் அன்புகூர்ந்து, உமக்கு என்னுடைய இருதயத்தைத் திறக்கிறேன். நான் பாவமுள்ளவனாக இருந்தும் நீர் என்னிடத்தில் வந்து, என்னுடைய அக்கிரமங்களை எல்லாம் கழுவி சுத்திகரித்து, உம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக என்னுள்ளத்தில் நீர் குடியிருக்கிறீர். இறைவா, இதோ நான் என்னுடைய இருதயக் கதவுகளை உமக்கு அகலத் திறக்கிறேன்.

கேள்வி:
  1. ஈஸா அல் மஸீஹ்வை ஏற்றுக்கொள்பவர்களுக்கு என்ன நடக்கிறது?



Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?