மஸீஹ் அண்டை வந்து பாருங்கள்
யோவான் 1:43-46
43 மறுநாளிலே ஈஸா அல் மஸீஹ் கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு: நீ எனக்குப் பின்சென்றுவா என்றார். 44 பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான். 45 பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய ஈஸா அல் மஸீஹ்வே என்றான். 46 அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
இதற்கு முந்திய வசனங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற சம்பங்களை நாம் பார்க்கிறோம். முதல் நாளில் எருசலேமிலிருந்து அனுப்பப்பட்டவர்கள் வந்திருந்தார்கள்; இரண்டாவது நாளில் ஈஸா அல் மஸீஹ் இறைவனுடைய ஆட்டுக்குட்டி என்று நபி யஹ்யா அறிவித்தார்; மூன்றாவது நாளில் ஈஸா அல் மஸீஹ் நான்கு சீஷர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். நான்காவது நாளில் பிலிப்பையும் நாத்தான்வேலையும் சீஷர்களுடைய வட்டாரத்திற்குள் அழைத்தார்.
பிலிப்பைத் தேடியவர் ஈஸாதான். யஹ்யா நபி மூலமாக ஈஸா அல் மஸீஹ் அவர்கள் நடுவில் இருக்கிறார் என்பதை நிச்சயமாக பிலிப்பு ஏற்கனவே கேட்டிருப்பார். ஈஸாவே இறை ஆட்டுக்குட்டி என்று யஹ்யா நபி சுட்டிக்காட்டியபோது பிலிப்பும் ஆச்சரியப்பட்டிருப்பான். பிலிப்பு ரப்புவை அறிய விரும்பியபோதிலும், ஈஸாவிடம் நேரடியாகச் செல்ல அவன் துணியவில்லை. இறை ஐக்கியத்திற்கு தான் தகுதியற்றவன் என்று அவன் நினைத்தான். ஆகவே ஈஸா அல் மஸீஹ் அவனிடம் சென்று அவனுடைய ஐயப்பாட்டை நீக்கி, எழுந்து என்னைப் பின்பற்றிவா என்று அழைத்தார். மனிதர்களைத் தனக்கென்று தேரிந்துகொள்வதற்கு ஈஸா அல் மஸீஹ்வுக்கு உரிமையிருந்தது, ஏனெனில் அவரே அவர்களைப் படைத்தவர், நேசிக்கிறவர், விடுவிக்கிறவர். அவரை ஏற்றுக்கொள்வது நாமல்ல, அவரே நம்மைத் தெரிந்துகொள்கிறார். அவரே நம்மை முதலில் பார்க்கிறார், தேடுகிறார், கண்டுபிடிக்கிறார், அவருடைய பணிக்காக நம்மை அழைக்கிறார்.
அவருடைய அழைப்பில்லாமல் நாம் அவரைப் பின்பற்ற முடியாது, மஸீஹ்விடமிருந்து கட்டளையைப் பெறாவிட்டால் நாம் அவருக்குப் பயனுள்ள பணியை செய்ய முடியாது. தெரிவுசெய்யப்படாமல் இறைவனுடைய இராஜ்யத்தில் பணிசெய்பவன் தனக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு செய்கிறான். ஆனால் யாரெல்லாம் மஸீஹ்வின் சத்தத்தைக் கேட்டு, உடனடியாகக் கீழ்ப்படிகிறார்களோ அவர்கள் கிறிஸ்துவின் மென்மையான பராமரிப்பை அனுபவிப்பார்கள். எல்லா நேரத்திலும் கிறிஸ்து அவர்களுக்குப் பொறுப்பாளியாயிருப்பார்.
பிலிப்பு சீக்கிரமாகவே நற்செய்தியறிவிக்கச் சென்றுவிட்டார்; தன்னுடைய நண்பனாகிய நாத்தான்வேலைப் பார்த்து அவருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்கிறார்; திருச்சபையின் செய்தியை அறிவிக்கிறார். நாங்கள் அவரைக் கண்டோம் என்கிறார். நான் அவரைக் கண்டேன் என்று கூறவில்லை. அவர் திருச்சபையின் விசுவாச அறிக்கையுடன் தன்னைத் தாழ்மையோடு இணைத்துக்கொள்கிறார்.
ஈஸா
அல் மஸீஹ் தன்னுடைய பணியைக் குறித்து இந்த சீஷர்களுக்குச் சொல்லியிருப்பார் போல தெரிகிறது. யோசேப்புதான் ஈஸாவை வளர்த்த தகப்பன். ஈஸா அல் மஸீஹ் பெத்தலகேமில் நடைபெற்ற தன்னுடைய பிறப்பைப் பற்றி எதுவும் சொல்லவில்லை, இந்த நிலையில் சீஷர்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது.
நத்தான்வேல் வேதாகமத்தில் தெளிந்த அறிவுடையவனாயிருந்தான். ஆகவே அவன் மோசே மற்றும் தீர்க்கதரிசிகளுடைய புத்தகங்களை ஆராய்ந்து, கிறிஸ்துவைக் குறிக்கும் வாக்குத்தத்தங்களை அறிந்துகொண்டான். வரப்போகிறவர் தாவீதின் சந்ததியில் வந்து பெத்தலகேமில் பிறப்பார் என்று அறிந்திருந்தான். மேசியா நாசரேத்திலிருந்து வருகிறார் என்ற உண்மையை நாத்தான்வேலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாசரேத் ஒரு சிறிய ஊராயிருந்ததோடு, அதைப்பற்றி எந்தத் தீர்க்கதரிசனமும் பழைய ஏற்பாட்டில் இடம்பெறவில்லை. மேலும் அவருக்கு கலிலேயா மாகாணத்திலிருக்கும் இந்த நகரமானது செலோத்தியர்களுடைய கலகத்திற்கும் ரோமர்களுக்கு எதிரான தேசபக்திக்கும் பேர்போன இடம் என்பதும் தெரியும். அங்கு ஏற்பட்ட கலகம் அடக்கப்பட்டது, பெருமளவிலான இரத்தம் சிந்தப்பட்டது.
இந்தத் தகவல்களைக் குறித்து பிலிப்பிற்கு எந்தக் கவலையும் இல்லை. மஸீஹ்வைக் கண்டதில் அவருக்கிருந்த மகிழ்ச்சி பெரிதாயிருந்தது. அவருடைய ஆர்வம் நாத்தான்வேலுடைய சந்தேகங்களை மேற்கொண்டது. எந்த வாதத்திற்குள்ளும் அவர் நுழையாமல், வந்து பார் என்று குறிப்பிட்டார். சத்தியத்திற்காக அனுபவத்தின் அடிப்படையில் நற்செய்திப்பணி செய்யும்போது இந்த விதிமுறை மிகவும் முக்கியமானது. மக்களை வந்து பாருங்கள் என்று நாம் அழைக்க வேண்டும். ஈஸா அல் மஸீஹ்வை பற்றி வாதம் செய்யாதீர்கள். அவருடைய அனுபவமே அவருடைய வல்லமையாகவும் ஐக்கியமாகவுமிருக்கிறது. நம்முடைய சாட்சி, கற்பனையான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டிராமல், உண்மையான கர்த்தராகிய ஒரு நபரை அடிப்படையாகக் கொண்டது.
துஆ:
அன்புள்ள இறைவனாகிய ஈஸா
அல் மஸீஹே, உம்முடைய சந்தோஷம் எங்களுடைய இருதயத்தை நிரப்பி, எங்களை உம்முடைய ஐக்கியத்தின் அழகினால் அசைத்து மற்றவர்களை உம்மிடம் அழைத்துவரச் செய்வதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பொறுமையுடன் கூடிய அன்புடன் பிரசங்கிக்கும் விருப்பத்தை எங்களுக்குத் தாரும். உம்முடைய நாமத்தை தைரியமாகச் சொல்வதில் எங்களுக்கிருக்கும் எல்லா பயத்தையும்,தாமதத்தையும், தயக்கத்தையும் மன்னித்தருளும்.
Comments
Post a Comment