இன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை


இஸ்லாமியர்கள் இன்ஜீல் என்று அழைக்கும் சுவிசேஷ கிதாபுகளில் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) ஈஸா அல் மஸீஹ் இறைவன் என்பதற்கு சான்றுகள் இல்லை என்று பகிரங்கமாக இஸ்லாமிய அறிஞர்கள் பயான் செய்துகொண்டிருக்கிறார்கள்.
உண்மையாக சத்தியத்தை தேடும் இஸ்லாமியர் உண்மையை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த சிறிய கட்டுரையில் அவர்கள் குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதை ஆராய்வோம். ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய இறைத்தன்மையை வெளிப்படுத்திய வசனங்களையும் ஆராய்வோம்.

1) உலகம் உண்டாவதற்கு முன்பாக ஈஸா அல் மஸீஹ்: 

உலகம் உண்டாவதற்கு முன்பாக தான் இருந்ததாகவும், தனக்கு மகிமை உண்டாகி இருந்ததாகவும் பின்வறும் இன்ஜீலின் வசனங்களில் ஈஸா அல் மஸீஹ் கூறுகிறார். இன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ் தனக்கு இறைத்தன்மை இல்லை என்று சொன்னதாக கூறும் இஸ்லாமிய அறிஞர்களின் கண்களுக்கு இந்த வசனங்கள் மறைவாக இருந்திருக்குமோ தெரியவில்லை.
பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். (யோவான் 17:5) 

பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். (யோவான் 17:24) 
உலகம் தோற்றத்துக்கு முன்பே இறைவனோடு இருந்தவர் ஈஸா அல் மஸீஹ் என்பதை இந்த இரண்டு வசனங்களிலுமிருந்து புரிந்துகொள்ளலாம். இறைவன் உலகத்தையும் அதில் மனிதன் வாழத்தேவையான அத்தனை காரியங்களையும் படைத்துவிட்டு கடைசியாக மனிதனை படைத்தார் என்பதை இறைவேதத்தை கற்றுக்கொண்டவர்களுக்கு தெளிவாகத் தெரியும். ஈஸா அல் மஸீஹ்வும் ஒரு மனிதன்தான் என்றால் அவர் எப்படி உலகதோற்றத்திற்கு முன்பே இருந்திருக்க முடியும் என்பதை இவர்கள் சிந்திக்கவேண்டாமா?


2) பிதாவை போல, ஈஸா அல் மஸீஹ்வும் உயிர்ப்பிக்கிறார்:

பிதா எப்படி மனிதர்களை உயிர்ப்பிக்கிறாரோ அதே போல தானும் தமக்கு சித்தமானவர்களை உயிரோடு எழுப்புவேன் என்று ஈஸா அல் மஸீஹ் சொல்கிறார்.
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறது போல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். (யோவான் 5:21)
இறைவன் செய்யும் செயலை ஒருவர் குறிப்பிட்டு, "அதே போல" நானும் செய்வேன் என்றுச் சொல்லமுடியுமா? அப்படி ஒருவர் சொல்வாரானால், அவர் நிச்சயமாக இறைவனாகத் தானே இருக்கமுடியும்.
 
3) பிதாவை கணம் பண்ணுவது போல, ஈஸா அல் மஸீஹ்வையும் கணம் பண்ணவேண்டும்: 

பிதாவிற்கு எப்படி கனத்தை மனிதர்கள் தருகிறார்களோ, அதே போல, குமாரனுக்கும் தரவேண்டும் என்று இன்ஜீல் போதிக்கிறது.
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறது போல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். (யோவான் 5:22) 
கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரமானவர் இறைவன் மட்டும். இன்ஜீல் இறைவனுக்குறிய கனத்தை ஈஸா அல் மஸீஹ்வுக்கு கொடுக்கச் சொல்கிறது என்றால் அவர் இறைவன் என்றுதானே புரிந்துகொள்ளவேண்டும்.


4) இறைவனைத் தவிர யார் மனிதர்களின் பாவங்களை மன்னிக்கமுடியும்? 

உலகத்தில் மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு தனக்கு அதிகாரம் உண்டென்று ஈஸா அல் மஸீஹ் கூறுகிறார். இதனால், யூதர்கள் கோபம் கொண்டனர், இவர் இணை வைப்புச் செய்கிறாரே, இறைவன் அல்லவா பாவங்களை மன்னிக்கமுடியும் என்று கூறினர்கள்.
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்: இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (மாற்கு 2:5-11) 

பாவங்களை மன்னிக்கும் ஈஸா அல் மஸீஹ் தன்னை இறைவன் என்று சொல்கிறார். அதாவது தன்னை இறைவன் என்று சொல்கிறார் என்பதை அவர் காலத்தில் அவரோடு வாழ்ந்த யூதர்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால் அவரை ஈமான்கொள்ள தவறிவிட்டார்கள்.

5) ஏன் யூதர்கள் கல்லெறிய முற்பட்டார்கள், ஈஸா அல் மஸீஹ் தன்னை நபி என்றுச் சொன்னதாலா?
கீழே தரப்பட்ட வசனங்களில் ஈஸா அல் மஸீஹ் தன் ஆடுகளுக்கு "நித்திய ஜீவனை" "அழிவில்லாத வாழ்வை" தருவதாக வாக்கு செய்கிறார். மனிதனுக்கு நித்திய வாழ்வை யார் தரமுடியும், இறைவன் தான் தரமுடியும், அதனை ஈஸா அல் மஸீஹ் தான் கொடுக்கிறேன், என்றுச் சொன்னதால், யூதர்கள் கல்லெறிய முற்பட்டார்கள். பிதாவும் தானும் ஒன்றாக இருக்கிறோம் என்றுச் சொன்ன வார்த்தைகளின் பொருள் யூதர்களுக்கு புரிந்ததினாலே, "நீ தேவதூஷணம் சொன்னாய், உன்னை இறைவனுக்கு சமமாக எண்ணுகின்றாய்" என்று கல்லெறிய வந்தார்கள்.
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். (யோவான் 10:27-33) 


நான் ஒரு நபி  மட்டும் தான் என்று ஈஸா அல் மஸீஹ் சொல்லியிருந்தால், யூதர்கள் அவரை  கல்லெறிந்து கொள்ள முற்பட்டிருக்கமாட்டார்கள். யூதர்களுக்கு புரிந்த விஷயம் இஸ்லாமிய அறிஞர்களுக்கு புரியவில்லை என்பதை ஆச்சரியத்தில் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.

6) தன்னை தொழுதுக் கொள்பவர்களை ஈஸா அல் மஸீஹ் தடை செய்யவில்லை: 
ஈஸா அல் மஸீஹ் தன்னை தொழுதுக்கொண்டவர்களைப் பார்த்து அப்படிச்செய்யாதீர்கள், நான் வெறும் மனிதன் தான், அல்லது நபி மட்டும் தான், ஆகவே, என்னை தொழுதுக்கொள்ளவேண்டாம் என்றுச் சொல்லவில்லை.
அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். (மத்தேயு 14:33) 

அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். (மத்தேயு 28:9) 

உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான். (யோவான் 9:38) 

தொழுகை இறைவனுக்குறியது என்றால் ஈஸா அல் மஸீஹ் தன்னை தொழுதுகொள்வதை தடுக்கவில்லையென்றால் அவர் தன்னை இறைவன் என்றுதானே சொன்னார்.

முடிவு
மேலே நாங்கள் அவதானித்த இன்ஜீலின் சில வசனங்களிலிருந்து நாம் புரிந்துகொள்ளும் காரியங்களை சுருக்கமாக பார்ப்போம்.

1)
உலகம் உண்டாவதற்கு முன்பாக தனக்கு மகிமை இருந்தது என்று ஈஸா அல் மஸீஹ் கூறினார்.

2)
உலகம் உண்டாவதற்கு முன்பாக இறைவன் அவர் மீது அன்பாக இருந்ததாக கூறினார். 

3)
பிதாவைப் போல தானும் மனிதர்களை உயிரோடு எழுப்புகிறேன் என்று கூறினார். 

4)
பிதாவை கனம் பண்ணுவது போல, தன்னையும் கனம் செய்யவேண்டும் என்பதற்காக, மனிதர்களை அவரே நியாயந்தீர்க்கப்போவதாக கூறினார். 

5)
மனிதர்களின் பாவங்களை மன்னிக்க தனக்கு அதிகாரம் உண்டென்றுச் சொன்னார். 

6)
தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு அழிவில்லாத வாழ்வைத் தருவதாக கூறினார். 

7)
தன்னை தொழுதுக்கொள்கிறவர்களை அவர் தடைச் செய்யவில்லை.

இந்த 7 காரியங்கள் ஈஸா அல் மஸீஹின் இறைத் தன்மையை வெளிப்படுத்தும் முக்கிய காரணிகளாக இன்ஜீலில் காணலாம். ஈஸா அல் மஸீஹ் தன்னை இறைவன் என்று சொன்னாரா? என்று அறியாமையில் கேள்வி கேட்கும் நன்பர்களும் இந்த 7 காரியங்களையும் தியானித்து புரிந்துகொள்ள வேண்டும் என்ற துஆவோடு இந்த சிறிய கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.


Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?