சிலுவை குர்பான் மறுதலிப்பு! – இஸ்லாமியரின் இரட்சிப்பு இழப்பு!
ஆசிரியர்: அஸ்கர்
''ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும்,
என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும்,
உம்மைப் பின்பற்றுவோரை (என்னை) மறுப்போரை விட கியாமத் நாள் வரை மேல் நிலையில் வைப்பவனாகவும்
இருக்கிறேன். பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. (ஸூரா 3:55 பி ஜைனுல்
ஆபிதீன் தமிழாக்கம்)
முன்னுரை:
ஈஸ்டர் பெருநாள் இறைவேதம் குறிப்பிடுவது
போல, ஈஸா அல் மஸீஹ்வைப் பின்பற்றும் எவருக்கும் மிக முக்கியமான ஒரு திருநாளாகும். இந்த
பண்டிகையின்போது, மஸீஹ் ஆகிய ஈஸா சிலுவையில் குர்பானியாகி மரித்த சம்பவங்களை நினைவுகூர்வது
மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. 1 கொரிந்தியர் 15:1-20 சொல்வது போல, இதுவே ஈஸ்டர்
திருநாளின் மையப் பொருளாக இருக்கிறது.
அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும்
உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்…கிறிஸ்துவானவர்
வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்;
அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், …கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால்,
எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா…கிறிஸ்து எழுந்திராவிட்டால்,
உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்…
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
இந்த வசனங்கள் இறைவனுடைய வார்த்தையான
இன்ஜீலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமின் தீர்க்கதரிசியான முஹம்மது அவர்கள்
ஆறாம் நூற்றாண்டில் தவ்ராத்துடன் கூட சேர்த்து இன்ஜீலும் இறைவனுடைய வார்த்தைதான் என்பதை
உறுதி செய்திருக்கிறார்1. தவ்ராத்தையும் இன்ஜீலையும் பின்பற்றும்படி அவர்
மக்களை உற்சாகப்படுத்தினார். அவை இன்றைய இறைவேதத்தில் நாம் காண்கிற பழைய மற்றும் புதிய
ஏற்பாட்டு வசனங்களே அன்று தவ்ராத் மற்றும் இன்ஜீல் என அறியப்பட்டிருந்தது2.
ஆகவே அவை திருத்தப் படாததாகவே இருந்திருக்க வேண்டும். முஹம்மது நபியின் காலத்திற்குப்
பின் அவை திருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அனுமானிப்பவர்கள், ஒரு கையில் இப்பொழுது
உள்ள அல் கிதாபையும், மறுகையில் ஆறாம் நூற்றாண்டிற்கு முன் எழுதப்பட்ட அல் கிதாபையும்
வைத்து ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது அனைத்து போதனைகளும் மாற்றப்படாமலேயே இருக்கிறது
என்பதைக் குறிக்கிறது! அல் கிதாபில் செய்தி திருத்தப்பட்டுவிட்டது என்று சொல்லும் முஸ்லீம்கள்
உண்மையில் குர்-ஆனின் கூற்றுக்கு முரண்படுகின்றவர்களாக இருக்கிறார்கள்.
கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை
முக்கியமான நிகழ்வாகக் காண்பதும், இவைகளை மறுதலிப்பதால் இஸ்லாமியர்கள் ஏன் தாங்கொணா
இழப்பை அடைகிறார்கள் என்பதைப் பார்ப்பதுமே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
முக்கியமான காரியம்
“முக்கியமானவைகளுக்கு
முக்கியமான (முதல்) இடம் கொடுப்பதே முக்கியமானதாகும்" என்று பெயர் அறியப்படாத
ஒருவர் சொல்லி இருக்கிறார். ஈஸா அல் மஸீஹின் சிலுவையின் முக்கியத்துவத்தை புரிந்து
கொள்வதற்கு, இறைவேதத்தின் முக்கியமான போதனையை சுருக்கமாகக் கூறுவது அவசியம் ஆகும்.
இறைவன் தமக்கு மகிழ்ச்சியும் புகழ்ச்சியும்
(கனமும்) உண்டாகும்படியாக இவ்வுலகத்தைப் படைத்தார். தன் உடன் உறவைப் பேணும்படியாக மனிதனைப்
படைத்தார். ஆனால் முதல் மனிதர்களாகிய ஆதமும் அவ்வாவும் இறைவனுக்குக் கீழ்ப்படியவில்லை.
அவர்கள் செய்த பாவத்தின் விளைவாக அவர்கள் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.
அதன் பின் மனிதனை மறுபடியும் தன் உறவுக்குள் கொண்டுவருவதற்கான இறைவனின் திட்டத்தை அல்
கிதாப் விளக்குகிறது. தொடர்ந்து மனிதனின் பாவம் அதிகரித்து, நூஹ் மற்றும் அவனுடைய குடும்பத்தினருடன்
அனைத்து மிருகங்கள் தங்கள் துணையுடன் பேழைக்குள் நுழைய, மீதி அனைவரையும் படைத்த இறைவன்
வெள்ளத்தால் அழிக்குமளவுக்கு ஆனது என்பதை நாம் காண்கிறோம். சீக்கிரத்திலேயே இந்த உலகம்
மறுபடியும் கறைபட்டது. ஏனெனில் மனிதன் தொடர்ந்து தன்னை உண்டாக்கியவருக்கு விரோதமாக
கலகம் செய்து கொண்டிருந்தான். இறைவன் இப்ராஹீமை தெரிந்தெடுத்து, இப்ராஹீமின் சந்ததி
மூலமாக உலகில் உள்ள அனைவரையும் பரக்கத்துச் செய்வேன் என வாக்குப் பண்ணினார். பின்பு
இப்ராஹீமின் வழித் தோன்றல்களில் யூத மக்களை தெரிந்து கொண்டார். இஸ்ரவேலருடனான அவருடைய
கிரியைகள் மூலமாக, இறைவன் யார், அவர் என்ன செய்கிறார், மற்றும் அவர் எப்படி செயல்படுகிறார்
என்பதை இந்த உலகம் அறிந்து கொண்டது. இறைவன் தம் வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் தம்
மக்களுடன் ஒரு உறவைக் கொண்டிருக்கிறார். இதன் மத்தியில் எருசலேம் தேவாலயத்தை
மையமாக வைத்து முறையான குர்பானிகள் செலுத்தும் முறை விவரமாக விவரிக்கப்பட்டிருக்கிறது3.
அந்த குர்பானிகள் மூலமாக இறைவன் ஜனங்களின் அசுத்தம் மற்றும் பாவங்களில் இருந்து சுத்திகரிப்பதாக
வாக்குப் பண்ணி இருக்கிறார். இவைகள் எல்லாம் வரப் போகிற பரிபூரண குர்பானிக்கு முன்னடையாளமாக
இருந்தது.
பண்டைய இஸ்ரவேலைச் சேர்ந்த யூதர்கள்
இறைவனுக்கு கீழ்ப்படியவும் மற்றும் தங்கள் பங்கைச் செய்யவும் முடியாதவர்களாக இருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து, இறைவனின் வாக்குத்தத்தங்கள் எவ்வாறு ஈஸா அல் மஸீஹின் மரணம், உயிர்த்தெழுதல்
மற்றும் பரமேறுதலில் நிறைவேறின என்பதைப் பற்றிய குறிப்பை இன்ஜீல் தருகிறது. தம் சிலுவை
மரணம் மூலமாக, நம் பாவங்களுக்கான தண்டனையை எடுத்துப் போடுவதற்கு அவரே இறுதியான மற்றும்
பரிபூரண குர்பானியாக இருக்கிறார். ஈஸா அல் மஸீஹ் திரும்ப வரும்போது, அவர் இறைவனின்
அரசை என்றென்றுமாக நிலை நிறுத்துவார். அந்நேரம் வரைக்கும், இறைவனின் ஆவியானவர் (ரூஹுல்லாஹ்)
மக்களின் கண்கள் இறைவனின் அரசை காணும்படியாக திறக்காவிடில், அது அவர்களுக்கு
காணக்கூடாததாகவே இருந்துவிடும். தற்போது, ஈஸா அல் மஸீஹ் தங்கள் பாவங்களுக்காக மரித்தார்
என்று ஈமான் கொள்பவர்கள் மட்டுமே இறைவனின் அரசில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். (இன்ஜீலில்
குறிப்பிடப்பட்டிருப்பது போல) நன்றி உணர்வோடு அவர்கள் இறைவனுடைய வல்லமையில் அவருடைய
சித்தத்தைச் செய்கிறார்கள். ஈஸா அல் மஸீஹ் உயிர்த்தெழுந்தபின் தன் இரு சீடர்களிடம்
பேசிய வார்த்தைகளின் மூலமாக தேவனுடைய திட்டத்தில் அவர் வகிக்கும் முக்கிய பங்கை உறுதிப்
படுத்தி இருக்கிறார்:
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப்
புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில்
பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும்
எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக்
காண்பித்தார். (லூக்கா 24:25-27)
சிலுவை மறுதலிப்பால்
உண்டாகும் பயங்கர பின்விளைவுகள்
ஈஸா அல் மஸீஹ் சிலுவையில் மரிக்கவில்லை
என முஸ்லீம்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும். ஸூரா ஆலு இம்ரான் 55ம் வசனம்
(தலைப்பில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது), ஈஸா அல் மஸிஹ்விற்கு நேர்ந்ததை குறிப்பிடுவதற்கு
'mutawaffīka' என்ற அரபு பதத்தை பயன்படுத்துகிறது. ஒரு நபரின் சரீர மரணத்தைப் பற்றிச்
சொல்வதற்கு இந்த பதம் இன்றளவும் அரபி மொழி பேசுபவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதே
வார்த்தை மற்றும் இதனை மூலமாகக் கொண்ட வார்த்தைகள் குர்-ஆனில் 25க்கும் அதிகமான இடங்களில்
வருகிறது. இரண்டு இடங்களைத் தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் அவை மரணம் அல்லது மரணத்துடன்
தொடர்புடையவைகளைக் குறிக்கிறது. விதிவிலக்காக வரும் இரு இடங்களில் ஸூரா 6:60 மற்றும்
39:42ல், mutawaffīka' என்பது உறக்கத்தை உருவகமாகக் குறிப்பதாக வசனத்தின் பிண்ணனி வெளிப்படுத்துகிறது.
ஆனால் மஸீஹின் மரணத்தைப் பற்றிக் குறிப்பிடும் வசனமானது, உருவகம் அல்ல, அது நேரடி பொருளிலேயே
காணப்படுகிறது. ஆகவே அது உறக்கத்தை அல்ல, மரணத்தையே குறிப்பிடுகிறது.
சிலுவையையும், சிலுவை மரணத்துடன் தொடர்புடைய
சம்பவங்களையும் மறுதலிக்கும் முஸ்லீம்கள் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்:
· முந்தைய வேதங்களை உறுதிப் படுத்துவதாகக் கூறும் குர்-ஆன் முந்தைய வேதங்களின்
மைய போதனையை புறக்கணிப்பது என்பது எப்படி?
· இறைவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு புறம்பே பாவங்களுக்கான மன்னிப்பைப் பற்றிய
நிச்சயம் பெறுவது பற்றி வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை. ஆதலால், நரகத்துக்குச் செல்லக்
கூடிய ஆபத்துடன் நீங்கள் எப்படி வாழமுடியும்? ஈஸா அல் மஸீஹின் அழைப்பை நீங்கள் ஏன்
ஏற்றுக் கொள்ளக் கூடாது?
"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில்
வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்;
என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது,
உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும்
இருக்கிறது என்றார். (மத்தேயு 11:28-30)
அடிக்குறிப்புகள்:
1. ஸூரா 5:43 – 47, 66-69; 10:64,
94; 19:12; 3:48; சில கெட்ட யூதர்கள் வார்த்தைகளின் பொருளை மட்டுமே மாற்றினார்கள்,
தவ்ராத்தை அல்ல, ஸூரா 3:78 ஐ பார்க்கவும். வேறு சில யூதர்கள் இஸ்லாத்தின் தீர்க்கதரிசியிடம்
இருந்து கேட்ட வார்த்தைகளை மாற்றினார்கள், ஸுரா 2:75-79; 4:46 ஐ பார்க்கவும்.
2. யூத தீர்க்கதரிசியான ஹசரத் தாவூது
அவர்களுக்கு சபூர் அருளப்பட்டது (ஸூரா 4:163). ஸூரா 3:3ல் இது குறிப்பிடப்படாதது அதுவும்
தவ்ராத்தில் ஒரு பகுதி என்பதைக் குறிக்கிறது. இது பின்வரும் ஹதீஸ் இக்கருத்திற்கு துணையாக
இருக்கிறது, ( ħadīŧ, ābīħMişkāt al-Mas,
vol.2,p.1237): ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தில் உள்ளதை, தவ்ராத்தில் உள்ளதாக காப்
கூறினார். இயேசுவும் அவருடைய சீடர்களும் முழு பழைய ஏற்பாட்டையும் குறிப்பிடும்படியாக
நியாயப் பிரமாணங்களும் தீர்க்கதரிசனங்களும் என்ற பதங்களைப் பயன்படுத்தினார்கள். யோவான்
10:34 ஐ சங்கீதம் 82:6 உடனும், 1 கொரிந்தியர் 14:21 ஐ ஏசாயா 28: 11,12 உடன் ஒப்பிட்டுப்
பார்க்கவும். ஆதிச் சபையானது இஸ்லாம் வருவதற்கு முன்பாக இஞ்சில் மற்றும் தவ்ராத் ஆகிய
பதங்களை முழு வேதாகமத்தையோ அல்லது அதன் பகுதியையோ குறிப்பிட பயன்படுத்தியதை அனேக வரலாற்று
ஆவணங்கள் தெளிவாகக் காண்பிக்கின்றன. R.K. Harrison, Introduction to the New
Testament, p.99; Philip S. Schaff (ed.), A Select Library of Nicene and
Post-Nicene Fathers of the Christian Church: First Series. vol.8, p.7; B.B.
Warfield, The Inspiration and Authority of the Bible, p.413; Ignatius (A.D.
115) in Pros Filadelfeis 5; Pros Smurnaious 7.
3. தேவாலயம் மற்றும் பலி இவ்விரண்டிற்கும்
குர்-ஆன் ஒரு சாட்சியாக இருப்பதை ஸூரா 17:1-7லும், 2:67-74லும் காணலாம்.
Comments
Post a Comment