ஈஸாவை ஈமான் கொள்ளும் முதலாவது முஃமின்.
ஈஸாவை ஈமான் கொள்ளும் முதலாவது முஃமின்.
யோவான் 1:40-42
40 யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். 41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். 42 பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப்பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.
பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா, திபேரியாக் கடற்கரைக் கிராமமாகிய பெத்சாயிதாவிலுள்ள ஒரு மீனவன். பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானத்தைப் பெறுவதற்காகவும், மேசியாவின் வருகைக்காக காத்திருப்பதற்காகவும் அவர் ஸ்நானகனிடத்தில் வந்திருந்தார். அவருடைய இருதயம் மகிழ்ச்சியினால் நிறைந்திருந்தது; அவர் முதலில் கண்டுகொண்டதை தன்னோடு வைத்திருக்க அவரால் முடியவில்லை. அவர் அந்நியர்களிடம் அதை அறிவிக்காமல் முதலில் தன்னுடைய சகோதரனைத் தேடுகிறார். ஆகவே, தன்னுடைய ஆர்வம் மிகுந்த சகோதரனாகிய பேதுருவைப் பார்த்து, அந்திரேயா நற்செய்தியைச் சொல்லுகிறார், நாங்கள் வாக்குப்பண்ணப்பட்ட மஸீஹ்வை, இரட்சகரைக் கண்டோம், அவர் ரப்புவும் இறை ஆட்டுக்குட்டியுமானவர். பேதுருவுக்கு ஒருவேளை சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அந்திரேயா அவரை நம்பவைக்கிறார். அதன்பிறகு, பேதுருவும் சற்றுத் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டு ஈஸா அல் மஸீஹிடம் செல்கிறார்.
பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோது, ஈஸா அல் மஸீஹ் பேதுருவைப் பெயர்சொல்லி அழைத்தார். ஈஸா அல் மஸீஹ் பேதுருவின் மனதில் இருந்த காரியங்களை அறிந்தவராக அவருக்கு பாறை என்ற ஒரு பட்டப்பெயரைக் கொடுக்கிறார். ஈஸா அல் மஸீஹ் அவருடைய இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தையும் அவருடைய துடுக்குத்தனத்தையும் அறிந்திருந்தார். ஈஸா அல் மஸீஹுக்கு அனைத்து இருதயங்களையும் தெரியும், அவை அவருக்கு முன்பாக திறந்தவைகளாகக் காணப்படுகின்றன. பேதுரு புரிந்துகொண்டு, ஈஸா அல் மஸீஹ்வின் பார்வையிலேயே அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டார். இந்த படிப்பறிவில்லாத மீனவனை ஈஸா அல் மஸீஹ் பொறுமையோடு ஒரு உறுதியான பாறையாக மாற்றினார். மஸீஹ்வில் அவர் ஜமாஅத்தின் அடித்தளமானார். ஆகவே ஒருவகையில் ஆரம்பப்பணியைச் செய்த சீஷன் அந்திரேயாதான்.
இன்னொரு சீஷனும் தன்னுடைய சொந்த சகோதரனை மஸீஹ்வினிடத்தில் வழிநடத்தினார். யோவான் தன்னுடைய சகோதரனாகிய யாக்கோபை ஈஸாவினிடத்தில் வழிநடத்தினார். ஆனால் தாழ்மையின் காரணமாக இந்த இரண்டு பெயர்களையும் அவர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. உண்மையில் யோவானும் அந்திரேயாவும்தான் காலத்தின்படி பார்த்தால் முதல் சீஷர்கள்.
இந்த அறிமுக வசனங்களின் அழகை ஒரு சூரிய உதயத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆம் இது ஒரு புதிய யுகத்தின் ஆரம்பம். இந்த சீஷர்கள் சுயநலமற்றவர்களாக தங்களுடைய சகோதரர்களை மஸீஹ்விடம் நடத்தினார்கள். இந்தக் காலத்தில் அவர்கள் வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்து நற்செய்தியறிவிக்கவில்லை, தங்களுடைய உறவினர்களை மஸீஹ்விடம் நடத்தினார்கள். அவர்கள் நம்பிக்கைற்றவர்களையோ அரசியல்வாதிகளையோ தேடாமல், உடைந்த இருதயத்தோடும் மனந்திரும்புதலோடும் இறைவன்மேல் பசிதாகமுள்ளவர்களைத் தேடினார்கள். இவ்வாறு ரஹ்மத்தின் நற்செய்தியை, அளவுக்கதிகமான வைராக்கியத்தினால் அல்ல, ஈஸாவுடனுள்ள தொடர்பிலிருந்து வரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். இந்த ஆரம்ப சீஷர்கள் ஒரு மத்ரஸாவை நிறுவவில்லை, தங்களுடைய சுயசரிதையையும் எழுதவில்லை, தங்களுடைய அனுபவத்தின் சாட்சியை தங்கள் வாயின் வார்த்தையினால் அறிவித்தார்கள். யோவான் ஈஸா அல் மஸீஹ்வைப் பார்த்தார், அவர் பேசியதைக் கேட்டார், அவரைத் தொட்டார், அவரை நம்பினார். இந்த நெருக்கமான உறவிலிருந்துதான் அவர்களுடைய அதிகாரம் பிறந்தது. ஈஸா அல் மஸீஹ்வை அவருடைய நற்செய்தியில் நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? உங்களுடைய நண்பர்களை பொறுமையுடனும் வெற்றியுடனும் கிறிஸ்துவிடம் நடத்தியிருக்கிறீர்களா?
துஆ:
எங்கள் இறைவா ஈஸாவே, எங்கள் உள்ளத்திலுள்ள சந்தோஷத்திற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். உம்முடைய ஐக்கியத்தின் இனிமையினால் நீர் எங்களை அசைத்து, மற்றவர்களையும் நாங்கள் உம்மிடத்தில் வழிநடத்தும்படி எங்களுக்கு அருள்செய்வாயாக. அன்பினால் நற்செய்தியறிவிக்கும் தூண்டுதலை எங்களுக்குத் தருவாயாக. உமக்கு நாங்கள் தைரியமாக சாட்சிபகரும்படி, எங்களுடைய கோழைத்தனத்தையும் வெட்கத்தையும் எங்களுக்கு மன்னிப்பாயாக.
Comments
Post a Comment