மஸீஹ்வை குறித்து மேலும் ஊக்கமளிக்கும் யஹ்யா நபியின் ஷஹாதா

யோவான் 1:29-30 

29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. 30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
எருசலேமிற்குத் திரும்பிய பிரதிநிதிகள், யஹ்யா நபியைக் குறித்த தங்களுடைய வெறுப்புணர்ச்சியை அப்படியே வைத்து வைத்திருந்தார்கள். அந்தத் தருணம் வரையில் மஸீஹ் தம்முடைய மக்களை படைத்துத் தூய்மைசெய்யும் ஒரு சீர்திருத்தவாதி என்று யஹ்யா நபி நினைத்திருந்தார். மஸீஹாகிய ரப்புல் ஆலமீன் நோயுற்ற மரத்தை வெட்டியெறியும் கோடரி என்று எண்ணினார். இவ்வாறு மஸீஹ்வின் வருகை இறைவனுடைய கோபத்தின் நாளை அறிவிக்கிறது. மஸீஹ் நம் நடுவில் இருக்கிறார் என்று அவர் சொன்னதும் அவரை பின்பற்றியவர்கள் தங்களுடைய பாவங்களை நினைத்து மனவேதனையடைந்தார்கள். நியாயத்தீர்ப்பாகிய இடி எச்சரிப்பின்றி அவர்கள் நடுவில் விழும் என்று அவர்கள் கருதினார்கள்.

முப்பது வயது வாலிபனாகிய மஸீஹ் யஹ்யா நபியினித்தில் அமைதியாக வந்து தனக்கு திருமுழுக்குத் தரும்படி கேட்கிறார். இந்தத் தாழ்மை யஹ்யாவை ஆச்சரிப்படுத்தியது. அவன் தயங்கி, ஈஸாவே தன்னுடைய பாவத்தை மன்னித்து தனக்கு ஞானஸ்நானம் தரவேண்டும் என்று கேட்டார். ஆனால் நீதியை நிறைவேற்றும்படி மஸீஹ் ஞானஸ்நானத்தை வலியுறுத்தினார்.

அதன்பிறகு பரிசுத்தர் மனிதகுலத்தை அழிக்க வரவில்லை என்றும் பாவத்தைச் சுமக்கத்தான் வந்திருக்கிறார் என்றும் யஹ்யா நபி அறிந்துகொண்டார். அவர் மனித குலத்தின் பிரதிநிதியாக ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டார். ரப்புடைய வருகை கோபத்தோடு நிறைந்திருக்கக்கூடாது, ஒப்புரவாக்குதலினாலும் பாவமன்னிப்பினாலும் நிறைந்திருக்க வேண்டும். யஹ்யா நபி பழைய உடன்படிக்கையின் விளிம்பில் நின்றுகொண்டு, புதிய உடன்படிக்கையின் ஆழத்தை உணர்ந்துகொண்டார். இந்த தீவிரமான மாற்றம் அவருடைய புரிந்துகொள்ளுதலை மாற்றியமைத்தது.

அடுத்த நாள் ஈஸா அல் மஸீஹ் வந்தபோது, உங்கள் கண்களைத் திறந்து, பார்த்து உணருங்கள் என்று யோவான் அவரைக் காட்டிச்சொன்னார். அங்கே இடி விழவில்லை, மலக்குகள் கூட்டம் தோன்றவில்லை, மாறாக அனைவரும் அனுபவிக்கும்படி (கலிமா) வார்த்தை பொழியப்பட்டது. இந்த வாலிபன்தான் எதிர்பார்க்கப்பட்டவர், அவரே ரப்புல் ஆலமீன், உலகின் நம்பிக்கை. இனி தன்னைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டம் அரசியல் மற்றும் இராணுவரீதியான பழைய மஸீஹ் என்ற கருத்தைப் பற்றிக்கொண்டிருப்பதை யஹ்யா விரும்பவில்லை. இவர் வல்லமயுள்ளவரும் வெற்றிவாகை சூடக்கூடியவருமாகிய யூதாவின் சிங்கம் அல்ல, தாழ்மையும் மென்மையுமான இறைவனுடைய ஆட்டுக்குட்டி என்பதை புரியவைத்தார்.

இந்த ஈஸா உலகத்தின் பாவத்தைச் சுமப்பவர். பழைய பலி முறைகளை நினைவுகூரும்படி தெரிந்துகொள்ளப்பட்ட இறை ஆட்டுக்குட்டி ஆவார். அவர் அனைத்து மனிதர்களுக்கும் பதிலாளாயிருப்பதற்குத் தகுதியானவர். அவரரிடம் அன்பும் வல்லமையும் செயல்திறனும் உள்ளது. அவர் பரிசுத்தமுள்ளவர், எல்லாருடைய பாவங்களையும் சுமந்தாலும் அவர் பரிசுத்தமுள்ளராகவே இருப்பார் என்று யஹ்யா (ரூஹுல் குத்தூஸினால்) பரிசுத்த ஆவியினால் நிறைந்து அறிவித்தார். நாம் அவரில் இறைவனுடைய நீதியாகும்படி, பாவமற்ற மஸீஹ் நமக்காக பாவமானார்.

யஹ்யா நபியுடைய இந்த ஷஹாதா நற்செய்தியின் உச்சகட்டமாகவும், முழு கிதாப்பின் கருப்பொருளாகவும் இருக்கிறது. மஸீஹ் நமக்காகப் பாடுபடுவதே அவருடைய மகிமை என்பதை அவர் அறிந்துகொண்டார். மஸீஹ்வின் இரட்சிப்பு எல்லாரையும் உள்ளடக்கும் உலகளாவியது. சிகப்பு, மஞ்சள், கருப்பு வெள்ளை ஆகிய அனைத்து இனத்திற்கும் பொதுவானது. அது ஏழைக்கும் பணக்காரனுக்கும், அறிவாளிக்கும் மூடனுக்கும், வாலிபனுக்கும் வயோதிபனுக்கும், கடந்த காலத்திற்கும், நிகழ் காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் பொதுவானது. அவருடைய பதிலாள் பிராயச்சித்தம் முழுமையானது.

ஆட்டுக் குட்டியாக அவர் வந்த நாளிலிருந்து தீமையின் விளைவுகளை அவர் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார், ஆனாலும் அவர் இழிவானவர்களைத் துரத்தியடிக்காமலும், பெருமையுள்ளவர்களைப் புறக்கணிக்காமலும் அவர்களை நேசித்தார். அவர்களுடைய அடிமைத்தனத்தின் அளவை அவர் அறிந்தவராக அவர்களுக்காக மரிக்க ஆயத்தமாயிருந்தார்.

இறைவனுடைய ஆட்டுக்குட்டி தன்னுடைய செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களின் மேலிருந்த இறைவனுடைய கோபத்தை நீக்குகிறது என்று யஹ்யா அறிவித்தார். அவர்களுக்குப் பதிலாக மரிக்கப்போகும் பலிகடா அவர்தான். அங்கிருந்தவர்கள், ஒரு மனிதன் எவ்வாறு அனைவருடைய பாவத்தின் தண்டனையையும் சுமக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டார்கள். யஹ்யா நபியின் வார்த்தைகள் அவர்களுடைய கண்களைத் திறந்தது, ஆனாலும் மஸீஹ்வின் சிலுவை இன்னும் தெளிவாகக் காணப்படவில்லை. மஸீஹ்வில் உள்ள இறைவனுடைய திட்டத்தை ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி நிறைவேற்ற வேண்டும்.

அவர் எனக்கு முன்னிருந்தவர், அவர் என்னிலும் பெரியவர் போன்ற வார்த்தைகள் மூலமாக, அவர் நித்தியமான இறைவனாக இருக்கிறபடியால் இந்த இரட்சிப்பை ஈஸா அல் மஸீஹ்வே முடிப்பார் என்று மறுபடியும் யஹ்யா கூறுகிறார்.

மஸீஹ்வின் மகிமை மிகவும் பெரியது, ஆனால் சிலுவையில் வெளிப்பட்ட அவருடைய அன்பு அவருடைய மகிமையின் மையத்தை வெளிப்படுத்தியது. நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம்; அவர் உபத்திரவப்பட்டு சிலுவையில் தொங்கியதன் மூலம் நம்மை விடுதலை செய்யும் அன்பின் அளவை வெளிப்படுத்தினார் என்று யஹ்யா நபி அறிக்கையிடுகிறார்.
விண்ணப்பம்: 
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கும் பரிசுத்த தேவஆட்டுக்குட்டியே எங்கள் மேல் கிருபையாயிரும். மனுவுருவான நித்திய இறை மைந்தனே, எங்கள் பாவங்களை மன்னியும். தாழ்மையுள்ள ஈஸா அல் மஸீஹ்வே, நீர் எங்கள் பாவங்களினிமித்தம் வெட்கப்படவில்லை, அதற்காக நாங்கள் உம்மைக் கனப்படுத்துகிறோம். நீர் எங்களை நேசித்து சிலுவையில் எங்களைப் பூரணப்படுத்தினீர். நீர் நியாயாதிபதியாக வராமல், ஆட்டுக்குட்டியாக வந்தபடியால் நாங்கள் உம்மை நேசித்து, உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் நாட்டிலுள்ள அனைத்து மக்களின் பாவங்களையும் நீர் சுமந்து தீர்த்த காரணத்தினால் நாங்கள் உம்மை ஈமான் கொள்கிறோம். மற்றவர்களையும் நீர் இரட்சித்திருக்கிறீர் என்ற உண்மையை அவர்களுக்குச் சொல்லும் ஞானத்தை எங்களுக்குத் தாரும்.
கேள்வி:
  1. தேவ ஆட்டுக்குட்டி என்பதன் பொருள் என்ன?


Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?